மக்களை தேடி மருத்துவம் திட்ட தன்னார்வலர்கள் கலெக்டரிடம் மனு


மக்களை தேடி மருத்துவம் திட்ட தன்னார்வலர்கள் கலெக்டரிடம் மனு
x

மக்களை தேடி மருத்துவம் திட்ட தன்னார்வலர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்று கோரி நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தனர். அப்போது மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் ராஜேசுவரி தலைமையில் ஏராளமானவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் நுழைவுவாசலில் நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தன்னார்வலர்கள் என்ற முறையில் தமிழகம் முழுவதும் 11 ஆயிரம் பேர் பணி செய்து வருகிறோம். தினமும் 2 மணி நேர பணி என்ற அடிப்படையில் மாதம் ரூ.4,500 ஊக்கத்தொகை என்று கூறினாலும், எங்களது பணி வீடு, வீடாக சென்று மருந்து வழங்குவது, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் கண்டறிதல், தகவல்களை ஆன்லைனில் பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகளை முழுநேரமாக செய்து வருகிறோம். எனவே தமிழக அரசு எங்களை ஊழியர்களாக அங்கீகரித்து எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும் என்று கூறி உள்ளனர்.

இதுபோல் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெரும்படையார் தலைமையில் விவசாயிகள் கொடுத்த மனுவில், தமிழக அரசு நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,500, கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறுவதுடன் அதனை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சி விமன்ஸ் இந்தியா மூமெண்ட் சார்பில் மாவட்ட தலைவர் மும்தாஜ் அலிமா தலைமையில் நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், ''பாபநாசம் -திருச்செந்தூர் சாலை விரிவாக்க பணி பத்தமடை அருகே பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது. அந்த பணியை துரிதப்படுத்தி, சாலையை தரமானதாகவும், பாதுகாப்பானதாகவும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறி உள்ளனர்.


Next Story