தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காட்டுநாயக்கன் சமூக மக்கள் சாதிசான்றிதழ் கோரி கலெக்டரிடம் மனு
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காட்டுநாயக்கன் சமூக மக்கள் சாதிசான்றிதழ் கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காட்டுநாயக்கன் சமூக மக்கள் சாதிசான்றிதழ் கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.
சிங்கப்பூர் அதிகாரி மீது புகார்
தூத்துக்குடி திரேஸ்புரம் மஸ்ஜீதே முகத்தஸ் ஜமாத் கமிட்டி தலைவர் பக்கீர் மைதின் தலைமையில் ஜமாத் கமிட்டியினர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், தூத்துக்குடியை சேர்ந்த சம்சுதீன் மகள் அமீர் நிஷா என்பவரை, சிங்கப்பூரில் போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் முகமது ரபீக் என்பவர் திருமணம் செய்தார். பின்னர் அவர் அமீர் நிஷாவை கொடுமைப்படுத்தி, நகைகளை பறித்துக் கொண்டு விவாகரத்து பெற்று பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். தொடர்ந்து முகமது ரபீக்கை பற்றி விசாரித்த போது, அவர் ஏற்கனவே திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை பகுதியில் ஒரு பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர் பெண்களை ஏமாற்றி நகைகளை பறித்து வருகிறார். ஆகையால் அவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
தண்ணீர்
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் புவிராஜ் தலைமையில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்துக்கு உட்பட்ட பேய்க்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஆகையால் பயிர்களை பாதுகாப்பதற்காக வடகாலில் 1000 கன அடி தண்ணீர் திறந்து பயிர்களை பாதுகாக்க வேண்டும். தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் உறிஞ்சக்கூடிய 2 ராட்சத மோட்டார்களை சுமார் 20 நாட்கள் நிறுத்தி வைத்து தண்ணீர் பற்றாக்குறையை போக்க வேண்டும்என்று கூறி உள்ளனர்.
சாதி சான்றிதழ்
தூத்துக்குடி புறநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ராஜா தலைமையில் காட்டுநாயக்கன் சமுதாயத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி அண்ணாநகர், முள்ளக்காடு, முத்தையாபுரம், தாளமுத்துநகர், புதுக்கோட்டை, ஏரல், சாயர்புரம், கோவில்பட்டி, கயத்தார், கடம்பூர், கழுகுமலை, புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் பழங்குடியினத்தை சேர்ந்த காட்டுநாயக்கன் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதற்கும், பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளனர்.
காங்கிரஸ் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மச்சேந்திரன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்ய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் வருகின்றனர். இதனால் கூட்டம் அதிகமாக உள்ளது. மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகையால் சாயர்புரத்தை மையமாக வைத்து புதிதாக சார்பதிவாளர் அலுவலகம் திறக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
ஸ்டெர்லைட்
தூத்துக்குடி மாவட்ட சர்வதேச உரிமைகள் கழகம் துணைத்தலைவர்கள் பிரிசில்லா, பாலசுப்பிரமணியன், காட்வின் மற்றும் தூத்துக்குடி தொகுதி செயலாளர் சதீஷ்குமார், ஓட்டப்பிடாரம் தொகுதி செயலாளர் ராமசாமி, வக்கீல் ஆரோக்கியராஜ் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சட்டத்துக்கு புறம்பாக ஆலையை திறக்க முயற்சிப்பதை தடுத்து ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், ஆலை நிர்வாகம் பண பரிவர்த்தனை மூலம் ஆதரவாளர்களை திரட்டி வருகிறது. ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஆகையால் ஆலையை திறக்க கூடாது என்று கூறி உள்ளனர்.
இதே போன்று தூத்துக்குடி மீளவிட்டான், மடத்தூர், புதூர் பாண்டியாபுரம், பண்டாரம்பட்டி, சங்கரபேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை எங்கள் கிராமத்துக்கு மிக அருகில் உள்ளது. இந்த ஆலை எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு வேலை அளிக்கும் பிரதான நிறுவனமாக செயல்பட்டு வந்தது. எங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்றவற்றை வழங்கியது. கைத்தொழில் திறன் பயிற்சி அளிக்கும் நிலையம் நடத்தியது, பள்ளி குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, விளையாட்டில் சிறந்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் எங்களது கிராமத்திற்கே வந்து மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணி போன்றவற்றை ஸ்டெர்லைட் நிறுவனம் செய்து வந்தது. இந்த ஆலை மூடப்பட்டதால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம். ஆகையால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
நடவடிக்கை
காயல்பட்டினம் காயிதே மில்லத் நகரை சேர்ந்த முகமது சித்திக் என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது வீட்டின் முன்பு சுற்றுச்சுவர் மற்றும் 3 மரங்களும் உள்ளன. இதனை ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி நகராட்சி நிர்வாகத்தினர் அகற்ற முயற்சி மேற்கொண்டனர். இதனை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதன்படி இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது வீட்டின் சுற்றுச்சுவரை ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி கோர்ட்டு உத்தரவை மீறி இடிக்க முயற்சி செய்கின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.