டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி சப்-கலெக்டர் அலுவலகத்தை பா.ம.க.வினர் முற்றுகை விருத்தாசலத்தில் பரபரப்பு
டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை பா.ம.க.வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
பா.ம.க.வினர் முற்றுகை
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கச்சிராயநத்தம் கிராமத்தில் காட்டுக்கூடலூர் செல்லும் சாலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு, இயங்கி வருகிறது. இங்கு டாஸ்மாக் கடை இயங்குவதால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆவதோடு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதனால் மேற்கண்ட டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அக்கிராம மக்கள் மற்றும் பா.ம.க.வினர் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நேற்று விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை சமாதானம் செய்ததோடு, உங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி சப்-கலெக்டரிடம் கொடுங்கள் என கூறினர்.
சப்-கலெக்டரிடம் மனு
இதையடுத்து பா.ம.க.வினர் சப்-கலெக்டர் பழனியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- கச்சிராயநத்தம் கிராம எல்லைக்குட்பட்ட காட்டுக்கூடலூர் சாலையில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு மது குடிக்க வருபவர்களால் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏற்பட அதிகவாய்ப்புள்ளது. மேலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. ஆகவே மேற்கண்ட டாஸ்மாக் கடையை மூடவேண்டும். இல்லையென்றால் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கிராம மக்கள் சார்பில் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு மேற்கண்ட மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட சப்-கலெக்டர் பழனி, இதுபற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனை ஏற்ற பா.ம.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தில் பா.ம.க. நகர தலைவர் வக்கீல் சிவசங்கர், நகர செயலாளர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் செல்வராசு, ஏழுமலை, ஆர்.வி.பி.ராஜ், பள்ளிப்பட்டு செல்வராசு, புதுக்கூரைப்பேட்டை கே.என்.கலியபெருமாள், குப்புசாமி, எம்.ஆர்.மணிகண்டன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.