பெட்டிக்கடை நடத்த அனுமதிக் கேட்கும் மனுக்களை மாநகராட்சி ஆணையர் சட்டப்படி பரிசீலிக்க வேண்டும் -ஐகோர்ட்டு
பெட்டிக்கடை நடத்த அனுமதிக் கேட்கும் மனுக்களை மாநகராட்சி ஆணையர் சட்டப்படி பரிசீலிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், மாற்றுத்திறனாளியான சையீதா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "அல்லிக்குளம் மெட்ரோ ரெயில்வே நிலையத்துக்கு எதிரில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பெட்டிக்கடை அமைத்து டீ, காபி, பிஸ்கட் வியாபாரம் செய்து வருகிறேன். இந்தநிலையில் என் கடையை அகற்றப்போவதாக மாநகராட்சி அதிகாரிகள் மிரட்டி வருகின்றனர். எனவே, இந்த கடையை நடத்த அனுமதிக்கும்படி கடந்த ஜனவரி 28-ந்தேதி மாநகராட்சி ஆணையருக்கு மனு கொடுத்தும் இதுவரை பரிசீலிக்கவில்லை'' என்று கூறியிருந்தார்.
இதேபோல, நுங்கம்பாக்கம் பாஸ்போர்ட் அலுவலகம் அருகே பெட்டிக்கடை நடத்தி வரும் கல்யாணி என்பவரும், தான் தொடர்ந்து கடை நடத்த அனுமதிக்கேட்டு கடந்த மார்ச் மாதம் மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி, தனியாக ஒரு வழக்கை தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்குகளை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார். அப்போது மாநகராட்சி தரப்பில் ஆஜரான வக்கீல், "மனுதாரர்களின் கோரிக்கை மனுக்களை 4 வாரத்துக்குள் அதிகாரிகள் பரிசீலிப்பார்கள்'' என்று கூறி அதற்கு அவகாசம் கேட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரர்களின் கோரிக்கை மனுக்களை சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். அந்த உத்தரவை மனுதாரர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதுவரை மனுதாரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்கக்கூடாது'' என்று உத்தரவிட்டார்.