கன்னியாகுமரி, சேலம், திருப்பூரில் 3 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு
கன்னியாகுமரி, சேலம் மற்றும் திருப்பூரில் 3 இடங்களில் பெட்ரோல், மண்எண்ணெய் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள கருமன் கூடல் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் கல்யாணசுந்தரம் (வயது 55) என்பவருடைய வீட்டில் 2 மர்மநபர்களால் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. அதனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் சேதமடைந்தது. ஜன்னலை மறைக்க தொங்க விடப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் கருகின. மேலும் காரின் முன்பகுதியில் தீ பட்டதில் லேசாக கருகியும் இருந்தன.
தொழில் அதிபர் கல்யாணசுந்தரம் தற்போது எந்த கட்சியிலும் இல்லை என கூறப்படுகிறது. அதே சமயத்தில் அவர் வசிக்கும் பகுதியில் பா.ஜ.க. பிரமுகரின் வீடு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பா.ஜ.க. பிரமுகர் வீடு என நினைத்து மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசியிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.
சேலம்
இதேபோல் சேலம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ராஜன் (வயது 50) என்பவரது வீட்டில் 2 வாலிபர்கள் நேற்று காலை மண்எண்ணெய் நிரப்பிய பாட்டிலை எடுத்து வீசி எறிந்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
ஆனால் அந்த மண்எண்ணெய் குண்டு வெடித்து, தீப்பிடிக்கவில்லை. இதனால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.
திருப்பூர்
திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த ஏ.வி.பி. லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் காங்கயம் பகுதியில் பஞ்சாலை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜனதா கோவை கோட்ட பொறுப்பாளர் பாலு என்பவர் வாடகைக்கு குடியிருந்துள்ளார். பின்னர் அவர் சொந்த வீடு கட்டி அங்கு சென்று விட்டார். இதன் பின்னர் வீட்டின் உரிமையாளர் லட்சுமணன் அந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை லட்சுமணன் தூங்கி எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்தபோது, வீட்டின் முன்புற வளாகத்தில் யாரோ மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றது தெரிய வந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் அடிப்பகுதியில் பாட்டில் உடைந்து கிடந்ததுடன், பெட்ரோல் தரையில்கொட்டிகிடந்தது. ஆனால் எந்த சேதமும், பாதிப்பும் ஏற்படவில்லை.
இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர்.
பரபரப்பு
இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தகவல் வைரலாக பரவியதை தொடர்ந்து பா.ஜ.க. திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் ஏராளமான பா.ஜனதாவினர் சம்பந்தப்பட்ட வீட்டின் முன்பு திரண்டனர்.
கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜனதா முன்னாள் நிர்வாகி பாலு அந்த வீட்டில் குடியிருந்ததால், தற்போதும் அவர் அதே வீட்டில் இருப்பதாக நினைத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது லட்சுமணனுக்கு தொடர்புடைய நபர்கள் தொழில் போட்டி காரணமாக வீசினார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.