பெண் கைதிகள் நடத்தும் பெட்ரோல் நிலையம் -அமைச்சர் திறந்து வைத்தார்


பெண் கைதிகள் நடத்தும் பெட்ரோல் நிலையம் -அமைச்சர் திறந்து வைத்தார்
x

புழல் சிறை அருகே அமைக்கப்பட்ட பெண் கைதிகள் நடத்தும் பெட்ரோல் நிலையத்தை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.

புழல்,

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் தண்டனை பெற்ற கைதிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சிறைத்துறை சார்பாக கல்வி தொழிற்பயிற்சி, திறன் மேம்பாட்டு தொழிற்கல்வி மற்றும் தோல் பொருட்கள் செய்யும் தொழில், மழை கோர்ட் தயாரித்தல், சோப்பு தயாரித்தல், பூச்செடி தயாரித்தல், உரம் உற்பத்தி செய்தல், காய்கறிகளை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும், சிறை துறையும் இணைந்து இதுவரை தமிழகத்தில் வேலூர், கோவை, பாளையங்கோட்டை, புதுக்கோட்டை, புழல் ஆகிய 5 இடங்களில் ஆண் கைதிகள் நடத்தும் பெட்ரோல் நிலையம் அமைத்து இயங்கி வருகின்றன. இதில் தண்டனை பெற்ற சிறை கைதிகள் வேலை செய்து வருகிறார்கள். இதற்காக அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

பெண் கைதிகளுக்கு...

இந்தநிலையில் சிறை துறையும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் கைதிகளுக்காக புழல்-அம்பத்தூர் சாலையில் புழல் சிறை அருகே பெட்ரோல் நிலையம் அமைத்தது.

இந்த பெட்ரோல் நிலையத்தை நேற்று தமிழக சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து, ஒரு காருக்கு பெட்ரோல் ஊற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கைதிகளுக்கான இந்த பெட்ரோல் நிலையம் தமிழகத்தில் 6-வது பெட்ரோல் நிலையம் ஆகும். அதேநேரம் இந்தியாவிலேயே முதல்முறையாக பெண் கைதிகளுக்காக தொடங்கப்பட்ட முதல் பெட்ரோல் நிலையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

'ஷிப்டு' முறையில் பணி

புழல் பெண்கள் சிறையில் 250-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில் தண்டனை பெற்றவர்கள் மட்டும் 71 பேர் உள்ளனர். இவர்களுக்கு இந்த பெட்ரோல் நிலையத்தில் வேலை வழங்கப்படுகிறது.தினமும் 2'ஷிப்டு'கள் அடிப்படையில் ஒரு 'ஷிப்டு'க்கு 11 பேர் என்ற முறையில் 22 பேர் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை செய்வார்கள். இவர்களுக்காக மாத ஊதியம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் படிப்படியாக ரூ.10 ஆயிரம் வரை கிடைக்கும்.

தமிழகத்தில் திருச்சி, மதுரை, கோவை உள்பட மேலும் 5 இடங்களில் இதுபோல் பெட்ரோல் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இ்வ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை இயக்குனர் அமரேஷ் பூஜாரி, மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ., டி.ஐ.ஜி.க்கள் கனகராஜ், முருகேசன், சூப்பிரண்டுகள் நிகிலா நாகேந்திரன், கிருஷ்ணராஜ் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story