சாலை விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் பலி
சின்னசேலம் அருகே சாலை விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் பலி பரிதாபமாக இறந்தார்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே குரால் தெற்கு தெருவை சேர்ந்தவர் குணசேகரன் மகன் அக்னி (வயது 24). வீ.கூட்டுரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மதுமதி. இவர்களுக்கு 1½ வயதில் பூவரசி என்கிற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பூவரசிக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருந்து வாங்குவதற்காக அக்னி, குரால் கிராமத்திலிருந்து கூகையூருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். கூகையூர் கிராம எல்லை பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மாற்றுப்பாதையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக அக்னி நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து மதுமதி அளித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.