கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாய சங்கத்தினர் கடிதம்
கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளனர்.
ஈரோடு
கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளனர்.
கீழ்பவானி சீரமைப்பு திட்டம்
தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் தலைமை நிர்வாகி அறச்சலூர் செல்வம் கீழ்பவானி பாசன விவசாயிகள் சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
கீழ்பவானி பாசன திட்ட வாய்க்கால்களில் அதிக கசிவு ஏற்படுவதை தடுக்க கடந்த 1990-ம் ஆண்டு தொடக்கம் முதலே அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பேரில் அவர் வல்லுனர் குழு அமைத்து பாசன கட்டமைப்பை நவீனப்படுத்தும் திட்டத்தை உருவாக்கினார். வல்லுனர் குழுவின் விரிவான ஆய்வுக்கு பின்னர், கீழ்பவானி வாய்க்கால் நவீனப்படுத்தாவிட்டால் பாசனம் பெரிதும் பாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, பாசன சீரமைப்பு திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், சிலரின் சுயநலனுக்காக கீழ்பவானி பாசன திட்டம் நவீனப்படுத்துவதை தடுக்கும் போராட்டம் தீவிரப்படுத்தப்படுகிறது.
பாதிப்பு
இந்த திட்டத்தை செயல்படுத்தாமல் விட்டு விட்டால் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உள்ள விவசாய நிலங்கள், விவசாயிகள், தொழிலாளர்களின் வாழ்க்கை, பொருளாதார பரிமாற்றம் பாதிக்கப்படும். வளர்ச்சி குறையும்.
ஆனால் திட்டத்தை நிறைவேற்ற கடும் எதிர்ப்பு உள்ளது. இந்த எதிர்ப்பாளர்களுக்கு நீர்பாசன துறையின் செயலாளரும், கூடுதல் தலைமை செயலாளருமான சந்தீப் சக்சேனா எழுதிய கடிதத்தில், சட்டப்படியும், அறிவியல் படியும் சமூகத்தின் தேவையை ஒட்டியும் இந்த திட்டம் சரியானது என்று விளக்கி உள்ளது. அமைச்சர்கள் முயற்சி செய்தும் திட்டத்தை தொடங்க முடியாத நிலை உள்ளது. இதற்கு எதிர்தரப்பினரின் போராட்டம் காரணமாக உள்ளது. எங்களுக்கும் போராடக்கூடிய அத்தனை சக்தி இருந்தாலும், தமிழகத்தின் மொத்த நலன் குறித்தும் அக்கறை கொண்டு இருக்கிறோம். எனவேதான் எதிர் போராட்டங்கள் நடத்தாமல் இந்த கடிதம் மூலம் அணுகுகிறோம்.
வலிமையாக...
தற்கால சூழலில், தமிழகம் எதிர்கொள்ளும் அரசியல் ஆபத்துகள் முன்காலத்தில் இருந்தவை போன்றவை அல்ல. மிக மோசமானவை. இவற்றில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற தங்களின் (முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்) தலைமையிலான அரசும் கட்சியும் தமிழகத்தின் எதிர்காலத்துக்காக வலிமையாக இருக்க வேண்டும்.
எனவே தமிழக நலனுக்காக ஆர்ப்பாட்ட அரசியல் செய்யாமல் இருக்கும் எங்கள் தேவையை உணர்ந்து தயவுசெய்து கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு திட்ட வேலைகளை தொடங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் விவசாயி அறச்சலூர் செல்வம் கூறி உள்ளார். இவர் தமிழகத்தின் இயற்கை வளம் மற்றும் இயற்கை விவசாயத்துக்காக நம்மாழ்வாரோடு 40 ஆண்டுகள் இணைந்து செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.