கணக்கம்பாளையம் பகவதி நகர் குடியிருப்பில் சிதிலமடைந்து காணப்படும் வீடுகள்- புதிதாக கட்டித்தர மக்கள் கோரிக்கை
கணக்கம்பாளையம் பகவதி நகர் குடியிருப்பில் வீடுகள் சிதிலமடைந்து காணப்படு்கிறது. இதனால் புதிதாக வீடு கட்டித்தர மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
டி.என்.பாளையம்
கணக்கம்பாளையம் பகவதி நகர் குடியிருப்பில் வீடுகள் சிதிலமடைந்து காணப்படு்கிறது. இதனால் புதிதாக வீடு கட்டித்தர மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
100-க்கும் மேற்பட்டோர்
டி.என்.பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கணக்கம்பாளையம் ஊராட்சி வனப்பகுதியை ஒட்டியுள்ளது பகவதி நகர். இங்குள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பகவதி நகரில் 34 வீடுகள் 30 ஆண்டுகளுக்கு முன்பும், 40-க்கும் மேற்பட்ட வீடுகள் 20 ஆண்டுகளுக்கு முன்பும் இங்குள்ள மலைவாழ் மக்களுக்கு அரசு சார்பில் கட்டித்தரப்பட்டது.
தற்போது 40-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்கள் இடியும் நிலையிலும், மேற்கூரைகள் சிதிலமடைந்து கம்பிகள் வெளியில் தெரியுமாறு எலும்பு கூடாக காட்சி அளிக்கிறது.
சிறுவனுக்கு காயம்
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கூறுகையில், 'இங்குள்ள பல வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்து விட்டது. பல வீடுகள் பயன்படுத்த முடியாமல் உள்ளன. தற்போது மழைக்காலம் என்பதால் மேற்கூரைகள் எந்நேரமும் விழுந்து விடும் அச்சத்திலேயே வீடுகளில் வசிப்பவர்கள் தூங்க செல்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் உட்புற சுவர் இடிந்து விழுந்ததில் தூங்கிகொண்டுருந்த பள்ளி சிறுவன் ஒருவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிருக்கு பயந்து சில மக்கள் வீட்டுக்கு வெளியில் குடிசை போட்டு வாழ்ந்தும் வருகின்றனர். மழைக்காலங்களில் வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று இறவில் தூங்கும் அவலநிலையும் எங்களுக்கு ஏற்பட்டு உள்ளது.
புதிதாக வீடு கட்டி தர வேண்டும்
இதேபோல் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பகவதி நகரில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டியும் சிதிலமடைந்து காணப்படுகிறது.
30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் பகவதி நகரில் உள்ள குடியிருப்பு வீடுகள் பெரும்பாலும் சிதிலமடைந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கணக்கம்பாளையம் பஞ்சாயத்து நிர்வாகம், வருவாய்த்துறையினர் மற்றும் மாவட்ட கலெக்டர் என பல அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்து உள்ளோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே இனிமேலாவது இந்த பகுதியில் எங்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.