ரூ.14 கோடி சொத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை; போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு


ரூ.14 கோடி சொத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை; போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
x

ரூ.14 கோடி சொத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

ஈரோடு

ரூ.14 கோடி சொத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

ரூ.98 லட்சம் கடன்

ஈரோடு மேட்டுநாசுவம்பாளையம் காலிங்கராயன் புதூரை சேர்ந்த முருகானந்தம் (வயது 52) என்பவர், தன்னுடைய குடும்பத்தினருடன் நேற்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

நான் எனது அண்ணன் பிரபாகரன் குடும்பத்தினருடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமான பூர்விக இடத்தில் பேக்கரி மற்றும் ஓட்டல் வைத்து கடந்த 20 ஆண்டுகளாக தொழில் செய்து வந்தோம். தொழிலை விரிவுப்படுத்துவதற்காக நானும், எனது அண்ணனும் கடந்த 2014-ம் ஆண்டு கோவையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் எங்களது பூர்விக சொத்தினை அடமானம் வைத்து ரூ.98 லட்சம் கடன் பெற்றோம்.

தொந்தரவு

தொழில் நஷ்டத்தின் காரணமாக கடன் தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை. இதற்கிடையில் எனது அண்ணன் கடந்த 2017-ம் ஆண்டு இறந்து விட்டார். இதனால், எங்களது சொத்தினை ஏலம் விட அந்த நிதி நிறுவனத்தினர் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து ஈரோட்டில் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வரும் எனது உறவினர்கள் நாங்கள் பெற்ற கடனை கோவை நிதி நிறுவனத்தில் செலுத்தி, இடத்தை மீட்டு தருவதாக உறுதியளித்தனர்.

பின்னர், பணத்தை வட்டியுடன் கேட்டு அவர்கள் தொந்தரவு செய்தனர். இதைத்தொடர்ந்து முக்கிய பிரமுகர் ஒருவர் முன்னிலையில், எனது உறவினருக்கே சொத்தை கிரையம் செய்து கொடுத்து, அவருக்கு சேர வேண்டிய தொகையை எடுத்து கொண்டு மீதமுள்ள தொகையை எங்களுக்கு தர வேண்டும் என பேசி முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, எங்களுக்கு தெரியாமல் வேறு நபருக்கு இடத்தை கிரையம் செய்து, எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை தராமல் உறவினர் ஏமாற்றி விட்டனர். இந்த சொத்தின் மதிப்பு ரூ.14 கோடி ஆகும். ரூ.98 லட்சம் கடனை செலுத்தி விட்டு சொத்தை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டு எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.


Related Tags :
Next Story