10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை; மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு


10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை; மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு
x

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

ஈரோடு


10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

10 ரூபாய் நாணயம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு இயக்கத்தின் உறுப்பினர் சித்தோடு பகுதியை சேர்ந்த மணிகண்ணன் என்பவர் 10 ரூபாய் நாணயம் மற்றும் 1 ரூபாய், 2 ரூபாய் நோட்டுகளுடன் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்தார். பின்னர் அவர் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

ரிசர்வ் வங்கி மூலமாக அரசு 10 ரூபாய் நாணயத்தை மக்கள் புழக்கத்துக்காக வெளியிட்டு உள்ளது. அதை, அரசு மற்றும் தனியார் பஸ்களில் கண்டக்டர்கள் வாங்க மறுக்கின்றனர். இதேபோல் சிறு வியாபாரிகள் முதல் மொத்த வியாபாரிகள், டீக்கடைகள் என எங்கும் அரசு மக்கள் புழக்கத்துக்காக வெளியிட்டுள்ள 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை. இதேபோல் 1 ரூபாய் மற்றும் 2 ரூபாய் நோட்டுகளையும் வாங்க மறுக்கிறார்கள். எனவே இதுகுறித்து விசாரித்து, முறையான அறிவிப்பு வெளியிட்டு, இந்த பிரச்சினைக்கு முற்று புள்ளி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

260 மனுக்கள்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், 'புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட வாரச்சந்தையில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மாட்டிறைச்சி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் 22-ந்தேதி நகராட்சி நிர்வாகம் எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி கடைகளை இடித்துவிட்டது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே மீண்டும் கடைகள் நடத்த நகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.

பவானி பசுவேஸ்வரர் வீதி மற்றும் ஜங்கமர் வீதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், 'எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் காவிரி ஆற்றங்கரையோரம் குடியிருந்து வருகிறோம். இந்த சூழ்நிலையில் ஒருமாத காலத்திற்குள் வசிப்பிடத்தை காலிசெய்து, புறநகர் பகுதியில் ஒதுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்ல வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். அங்கு சென்றால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே நாங்கள் தொடர்ந்து அங்கு குடியிருக்க அனுமதி அளிக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர். இதேபோல் மொத்ததம் 260 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி அதை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


Related Tags :
Next Story