அரசு மருத்துவமனைகளில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய மருந்தாளுனர்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கோரிக்கை அட்டை அணிந்து மருந்தாளுனர்கள் பணியாற்றினர்.
தமிழ்நாடு அரசு மருந்தாளுனர் சங்கத்தினர் சார்பில் காலியாக உள்ள 1,300 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கொரோனா பணிக்கால ஊக்கத்தொகை வழங்க வேண்டும், தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் மருந்தாளுநர்களை எம்.ஆர்.பி. தேர்வு அடிப்படையில் தேர்வு செய்து பணி நிரந்தரம் ஆக்க வேண்டும் என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1-ந் தேதி முதல் இருந்து அரசு மருத்துவமனைகளில் கோரிக்கை அட்டை அணிந்து மருந்தாளுனர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் மருந்தாளுனர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனர்.
இதுகுறித்து சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் அமல்ராஜ் கூறும்போது, திண்டுக்கல் மாவட்டத்தில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை உள்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றி வருகிறோம்.
வருகிற 8-ந் தேதி வரை இந்த போராட்டம் தொடரும். அதன்பிறகு சங்க நிர்வாகிகளை அழைத்து அரசு பேச்சு வார்த்தை நடத்தாத பட்சத்தில் வருகிற 9-ந் தேதி சென்னை நலப்பணிகள் இயக்குனரக வளாகத்தில் மாநில அளவில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் இருக்க உள்ளோம் என்றார்.