வேப்பூர் இளம்பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த மருந்தக உரிமையாளர் கைது மருத்துவம் படிக்காமலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது அம்பலம்


வேப்பூர் இளம்பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த மருந்தக உரிமையாளர் கைது  மருத்துவம் படிக்காமலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது அம்பலம்
x
தினத்தந்தி 21 Nov 2022 12:15 AM IST (Updated: 21 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேப்பூர் இளம்பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அவர் மருத்துவம் படிக்காமலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடலூர்

வேப்பூர்,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கணபதி மகன் கோவிந்தராஜ் (வயது 38). இவருக்கும் நிராமணி கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் மகள் அமுதா(28) என்பவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 3-வது முறையாக கர்ப்பமான அமுதா, கருவில் இருக்கும் குழந்தை ஆணா?, பெண்ணா? என பரிசோதிக்க கள்ளக்குறிச்சி அருகே அசகளத்தூரில் உள்ள மருந்தகத்திற்கு சென்றார். இதையடுத்து அங்கிருந்த மருந்தக உரிமையாளரான கள்ளக்குறிச்சி மாவட்டம் விளந்தாங்கலைச் சேர்ந்த அன்பழகன் மகன் வடிவேல்(45) என்பவர், அமுதாவை சின்னசேலம் கடத்தூர் அருகே உள்ள பாண்டியாங்குப்பம் கிராமத்திற்கு அழைத்து சென்று ஸ்கேன் செய்து பார்த்தார். அதில் பெண் குழந்தை என தெரியவந்தது. இதையடுத்து ஏற்கனவே 2 பெண் குழந்தை உள்ளதால் 3-வதாக பெண் குழந்தை தேவையில்லை என கருதிய கோவிந்தராஜ்-அமுதா தம்பதியர், கருவை கலைக்க முடிவு செய்தனர்.

போலி டாக்டர் கைது

இதைத்தொடர்ந்து கடந்த 17-ந்தேதி காலையில் மருந்தக உரிமையாளர் வடிவேல் அமுதாவுக்கு கருக்கலைப்பு மாத்திரை வழங்கி உள்ளார். பின்னர் அன்று மாலை கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள ஒரு இடத்தில் அமுதாவை மட்டும் தங்க வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அமுதாவை கோவிந்தராஜிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர் நிராமணியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அப்போது அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாாின்பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மருத்துவப்படிப்பு படிக்காமல் நோயாளிகளுக்கு வடிவேல் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலி டாக்டரான வடிவேலை போலீசார் கைது செய்தனர்.


Next Story