தஞ்சை ரெயில் நிலையத்தில் புகைப்பட கண்காட்சி


தஞ்சை ரெயில் நிலையத்தில் புகைப்பட கண்காட்சி
x

தஞ்சை ரெயில் நிலையத்தில் புகைப்பட கண்காட்சி

தஞ்சாவூர்

இந்திய நாட்டின் பிரிவினைவாத நினைவுதினத்தையொட்டி தஞ்சை ரெயில் நிலையத்தில் புகைப்பட கண்காட்சி நடந்தது.

பிரிவினைவாத நினைவு தினம்

கடந்த ஆண்டு சுதந்திர தினவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, ஆகஸ்டு 14-ந் தேதியை "பிரிவினைவாத நினைவு தினமாக" அனுசரிக்கப்படும் என்று அறிவித்தார். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நாடு முழுவதும் பிரிவினைவாத நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இந்தியாவின் சுதந்திரத்துக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து நாட்டு மக்கள் கடுமையாக போராடினர். பல்வேறு போராட்டங்களின் விளைவாக நாட்டுக்கு விடுதலையை வழங்க ஆங்கிலேய அரசு முடிவு செய்தது. அப்போது இந்தியாவும், பாகிஸ்தானும் தனித்தனி நாடாக பிரிய முடிவு செய்தது.

புகைப்பட கண்காட்சி

இதையடுத்து பாகிஸ்தான் 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந் தேதி தனி நாடாக உதயமானது. அப்போது இந்தியாவில் இருந்து பலரும் பாகிஸ்தான் நாட்டுக்கு ரெயில் மூலம் பல்வேறு நெரிசல்களில் சிக்கி பயணம் செய்தனர். இதில் பலர் உயிரிழந்தனர். நாடு பிரிவினையின் போது, ரெயிலில் பயணம் செய்த பொதுமக்களின் வாழ்க்கை முறை குறித்து அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாடு முழுவதும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் காட்சிப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி திருச்சி ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட திருச்சி, தஞ்சை, விழுப்புரம், புதுச்சேரி ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த புகைப்பட கண்காட்சி நேற்று நடைபெற்றது. பிரிவினையால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை வெளிப்படுத்தும் வகையிலும், லட்சக்கணக்கான மக்களின் வேதனை, துன்பம் மற்றும் வலியை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த கண்காட்சியில் புகைப்படங்கள் இடம் பெற்று இருந்தன.

தஞ்சை ரெயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பலரும் பார்வையிட்டு, சுதந்திரம் பெறுவதற்கு முதல்நாளில் நாட்டில் பொதுமக்களின் இடம் பெயர்வு குறித்த புகைப்படங்களை வியப்போடு பார்வையிட்டு சென்றனர்.


Next Story