பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்து வியப்பு: ஆந்திர புகைப்பட கலைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சுற்றுப்பயணம்
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்து வியந்த ஆந்திர புகைப்பட கலைஞர்கள் சோழர் வாழ்விடங்களை பார்வையிட மோட்டார் சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் நேற்று கும்பகோணம் வந்தனர்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்து வியந்த ஆந்திர புகைப்பட கலைஞர்கள் சோழர் வாழ்விடங்களை பார்வையிட மோட்டார் சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் நேற்று கும்பகோணம் வந்தனர்.
பொன்னியின் செல்வன்
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் மனோஜ்குமார்(வயது 27), வெங்கடேஷ்(30), தினேஷ்குமார்(28), லோகேஷ்(25) ஆகிய 4 பேரும் பட்டப்படிப்பு முடித்து விட்டு புகைப்படக்காரர்களாக பணியாற்றி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் (தெலுங்கு) படத்தை விஜய நகரத்தில் 50-க்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்கள் பார்த்து ரசித்துள்ளனர். திரைப்படத்தை பார்த்து வியந்த அவர்கள், படத்தில் வரும் சோழர ்கால நகரங்களான காஞ்சீபுரம், கும்பகோணம், தஞ்சாவூர், வீராணம் உள்ளிட்ட இடங்களை நேரில் காண முடிவு செய்தனர்.
சோழன்மாளிகை-கீழப்பழையாறை
அதன்படி மோட்டார் சைக்கிளில் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோழர் கால வாழ்விடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். அப்போது சோழர்கால நினைவுச் சின்னங்களை புகைப்படமும் எடுத்து வருகின்றனர்.
அதில் ஒரு குழுவை சேர்ந்த மனோஜ் குமார், வெங்கடேஷ், தினேஷ் குமார், லோகேஷ் ஆகியோர் நேற்று மோட்டார் சைக்கிளில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வந்தனர். இவர்கள் கும்பகோணம் அருகே உள்ள சோழன் மாளிகை, ராஜராஜ சோழனின் சகோதரியான குந்தவை வாழ்ந்த கீழப்பழையாறை, ஆரியப்படை வீடு உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
இதுகுறித்து அவர்கள் கும்பகோணத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவில் சிற்பங்கள்
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்த பின்பு சோழர் கால வரலாறு எங்களை பெரிதும் ஈர்த்தது. எந்த நவீன வசதியும் இல்லாமல் தென்கிழக்கு ஆசிய நாடுகள் வரை சென்று சோழர்கள் வெற்றி வாகை சூடியது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் உள்ள கல்வெட்டுகள், கோவில் சிற்பங்கள் ஆகியவற்றின் மூலம் சோழர் கால வரலாற்றை தெரிந்து கொண்டு, பிரமித்து போய் உள்ளோம். உலகத்திற்கே உதாரணம் காட்டும் வகையில் சோழர்கால ஆட்சி முறை இருந்துள்ளது.
கன்னியாகுமரியில் நிறைவு
இங்குள்ள கோவில்களை பார்க்கும்போது நமது கலாசாரம், பண்பாடு எத்தகைய சிறப்புடையது என்பதை அறிய முடிகிறது.
கடந்த 6-ந் தேதி தொடங்கிய எங்களுடைய பயணம் கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்த்த பிறகு வருகிற 15-ந் தேதி கன்னியாகுமரியில் நிறைவடைய உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.