நட்சத்திர ஏரியில் குதித்து உடற்கல்வி பயிற்சியாளர் தற்கொலை முயற்சி
கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியில் குதித்து உடற்கல்வி பயிற்சியாளர் தற்கொலைக்கு முயன்றார். அவரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
உடற்கல்வி பயிற்சியாளர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தீபக் (வயது 25). இவர் அதே பகுதியில் உள்ள மகளிர் கல்லூரியில் உடற்கல்வி பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் குடும்ப பிரச்சினையால் மனமுடைந்து இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று பகல் நேரத்தில் நட்சத்திர ஏரி பகுதிக்கு தீபக் வந்தார். அந்த பகுதியில் எப்போதும் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் கூட்டம் அதிகம் காணப்படும்.
நட்சத்திர ஏரியில் குதித்தார்
நேற்றும் நட்சத்திர ஏரி பகுதியில் சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர். ஏரிச்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தீபக் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று நட்சத்திர ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அங்கிருந்த இளைஞர்கள் சிலர் ஓடி வந்து ஏரியில் குதித்து அவரை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக தீபக்கை ெகாடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் மயங்கிய நிலையில் இருந்தார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
அவர் எதற்காக ஏரியில் குதித்து தற்கொலை செய்ய முயன்றார் என்பது குறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நட்சத்திர ஏரியில் கல்லூரி உடற்கல்வி பயிற்சியாளர் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.