2-ம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு
பாளையங்கோட்டையில் 2-ம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு நடந்தது.
பாளையங்கோட்டையில் 2-ம் நிலை காவலர்களுக்கான உடல்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது.
2-ம் நிலை காவலர்கள்
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த 2022-ம் ஆண்டுக்கான காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை 2-ம் நிலை காவலர் பதவிக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. இதில் நெல்லை மாவட்டத்திற்கு 1,159 ஆண் காவலர்கள், 544 பெண் காவலர்கள் என மொத்தம் 1,703 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் உடல் தகுதி தேர்வுக்காக கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
உடல்தகுதி தேர்வு
நேற்று உடல் தகுதி தேர்வு தொடங்கியது. ஆண்களுக்கான உடல்தகுதி தேர்வு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. இதில் முதல் நாளில் 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் 345 பேர் கலந்து கொண்டனர். நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கான உடல்தகுதி தேர்வு பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரி மைதானத்தில் நடந்தது.
முதல் நாளில் 300 பேர் கலந்து கொண்டனர். இதில் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், துணை போலீஸ் கமிஷனர் (தலைமையிடம்) அனிதா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த தகுதி தேர்வு அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டன.