மண்டைக்காட்டில் குழந்தையின் உடல் மீட்பு
மண்டைக்காடு அருகே குழந்தையுடன் கடலில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார். குழந்தையின் உடல் நேற்று மீட்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இரு உடல்களும் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
குளச்சல்:
மண்டைக்காடு அருகே குழந்தையுடன் கடலில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார். குழந்தையின் உடல் நேற்று மீட்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இரு உடல்களும் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
காதல் திருமணம்
மார்த்தாண்டம் அருகே உள்ள மாமூட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் மெல்பின் (வயது 37). இவர் மாலத்தீவில் வேலை செய்து வருகிறார்.
இவர், அதே பகுதியை சேர்ந்த சசிகலா (32) என்பவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மெர்ஜித் (3½ ) என்ற மகன் இருந்தான்.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் சசிகலா குழந்தை மற்றும் தாயாருடன் ஒரு வாடகை ஆட்டோவில் காப்புக்காட்டில் உள்ள ஒரு இடத்தில் ஜோதிடம் பார்க்க சென்றார். பின்னர் தாயாரை வீட்டுக்கு அனுப்பி விட்டு சசிகலா அதே ஆட்டோவில் குழந்தையுடன் மண்டைக்காடு அருகே உள்ள வெட்டுமடை கடற்கரை பகுதிக்கு சென்றார். அவர் ஏற்கனவே வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட்டு விட்டு, கையை கழுவி வருவதாக குழந்தையுடன் சென்றவர் திரும்பி வரவில்லை.
டிரைவர் மாற்றுத்திறனாளி என்பதால் ஆட்டோவிலிருந்து இறங்க முடியாமல் தவித்தார். அப்போது அங்கு வந்த வாலிபரிடம் ஆட்டோ டிரைவர் ஒரு தாயும், குழந்தையும் கை கழுவ சென்றது குறித்து கூறினார். இதை கேட்ட வாலிபர் விரைந்து சென்று கடலில் பார்த்தபோது சசிகலா உடல் கடலில் மிதந்து கொண்டு இருந்தது. உடனே கடலில் குதித்த அந்த வாலிபர், சசிகலாவின் உடலை மீட்டு கரை சேர்த்தார். சசிகலா குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
ஆனால் குழந்தையை காணவில்லை. கடல் நீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலோர குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன், சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து குழந்தையை தேடினார்கள். ஆனால் கிடைக்கவில்லை.
அதைத்தொடர்ந்து சசிகலாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தை உடல் கிடைத்தது
நேற்று 2-வது நாளாக குழந்தையை தேடும் பணி தொடர்ந்து நடந்தது. அப்போது சசிகலா கடலில் குதித்த பகுதி ஆழம் அதிகம் என்பதால் முத்துக்குளிக்கும் மீனவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் மண்டைக்காடு கடல் பகுதியில் குளித்துக்கொண்டிருந்த பக்தர் ஒருவரின் காலில் ஏதோ தட்டுப்பட்டது. உடனே அவர் மூழ்கி பார்த்தபோது ஒரு குழந்தையின் உடல் என தெரிய வந்தது. உடனே மீனவர்களின் உதவியுடன் உடலை மீட்டு கரை சேர்த்தனர். அதைத்தொடர்ந்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை
இதற்கிடையே பத்மநாபபுரம் சப் - கலெக்டர் கவுசிக் வெட்டுமடை பகுதிக்கு வந்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.
சசிகலா தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்ததும் மாலத்தீவில் இருந்து அவரது கணவர் ஊருக்கு புறப்பட்டு வந்தார்.
தற்கொலை செய்து கொண்ட சசிகலா மற்றும் குழந்தையின் உடல்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.