சாலையில் பள்ளம் தோண்டியதை கண்டித்து வியாபாரிகள், விவசாயிகள் திடீர் மறியல்
சாலையில் பள்ளம் தோண்டியதை கண்டித்து ஓசூரில் யாபாரிகள், விவசாயிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
ஓசூர்:
ஓசூர் அருகே பத்தலப்பள்ளியில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட், தற்போது மாற்று இடத்தில் தனியார் நிலத்தில் போக்குவரத்து நெரிசலின்றி செயல்பட்டு வருகிறது. இதற்கு அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் மார்க்கெட்டுக்கு செல்லும் தற்காலிக சாலை, கால்வாய் மீது அமைக்கப்பட்டதாக கூறி வருவாய்த்துறையினர் நேற்று பொக்லைன் எந்திரத்தின் மூலம், சாலையில் பள்ளம் தோண்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சங்க தலைவர் நாராயணன் மற்றும் துணைத்தலைவர் ரங்கநாத் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், தோண்டிய பள்ளத்தை மூடுமாறு கூறி தாசில்தார் அங்கிருந்து சென்றுவிட்டார். அதிகாரிகள் தொடர்ந்து இடையூறாக செய்வதாக வியாபாரிகள் ஆவேசத்துடன் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்திற்கு, ஓசூர் அட்கோ போலீசாரும் வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி இது சம்பந்தமாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போன் மூலம் உறுதியளித்தார். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.