பெண்ணுக்கு தவறான சிகிச்சை செய்ததாக புகார்: காரைக்குடியில் உறவினர்கள் திடீர் மறியல்


பெண்ணுக்கு தவறான சிகிச்சை செய்ததாக புகார்: காரைக்குடியில் உறவினர்கள் திடீர் மறியல்
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் பெண்ணுக்கு தவறான அறுவை சிகிச்சை செய்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து உறவினர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடியில் பெண்ணுக்கு தவறான அறுவை சிகிச்சை செய்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து உறவினர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தவறான அறுவை சிகிச்சை

காரைக்குடி அருகே மித்தரங்குடி கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் மனைவி சந்திரா (வயது 45). இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு கர்ப்பப்பையில் பிரச்சினை இருப்பதாக கூறி காரைக்குடி பழைய அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று அங்கு பணியில் இருந்த டாக்டர் ஒருவரிடம் பரிசோதனை செய்தார்.

அப்போது அவரது கர்ப்பப்பையில் பிரச்சினை இருப்பதாக கூறி காரைக்குடி புதிய அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 21-9-21 அன்று சந்திராவிற்கு கர்ப்பப் பையில் அறுவை சிகிச்சையை டாக்டர்கள் செய்தனர்.

இதையடுத்து கடந்த 1½ ஆண்டுகளாக சந்திராவிற்கு தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்த போது கர்ப்பப்பையில் அறுவை சிகிச்சை தவறாக செய்ததால் இந்த பிரச்சினைக்கு காரணம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மறியல் போராட்டம்

இ்ந்த நிலையில் சந்திரா தனது கணவருடன் சென்று டாக்டர்களிடம் கேட்டபோது அவர்கள் சரிவர பதில் கூறவில்லையாம். இதையடுத்து நேற்று காலை காரைக்குடி புதிய அரசு தலைமை ஆஸ்பத்திரி முன்பு சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் அந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதில் சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய தலைவர் செல்வா தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜ், சாக்கோட்டை தெற்கு ஒன்றிய தலைவர் ராமலிங்கம், காரைக்குடி நகர தலைவர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சமாதான கூட்டம்

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த காரைக்குடி தாசில்தார் மற்றும் அரசு அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட டாக்டர்கள் வந்து பதிலளிக்க வேண்டும் என கூறினர். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் குன்றக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவகி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பேச்சுவார்த்தையில் போதிய உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு செல்லும் திருச்சி சாலையில் அமர்ந்து மறியல் செய்ய முயன்றவர்களிடம் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதான கூட்டத்திற்கு அழைத்தனர். பின்னர் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் அரசு ஆஸ்பத்திரியில் தரமான சிகிச்சை அளித்து குணப்படுத்த வேண்டும் என்றும், வரும் காலங்களில் நோயாளிகளுக்கு மேற்கண்ட அறுவை சிகிச்சை செய்யும் போது அவர்களின் உறவினர்களுக்கு அவ்வப்போது தகவல் கொடுத்து தொடர்ந்து ஆஸ்பத்திரிக்கு நோயாளிகளை அழைத்து வர அறிவுறுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சந்திராவிற்கு மீண்டும் தரமான சிகிச்சை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட பின்னர் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.


Related Tags :
Next Story