பாலை சாலையில் கொட்டி, கறவை மாடுகளுடன் உற்பத்தியாளர்கள் மறியல்
பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி பாலை சாலையில் கொட்டி, கறவை மாடுகளுடன் உற்பத்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி,
பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி பாலை சாலையில் கொட்டி, கறவை மாடுகளுடன் உற்பத்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கொள்முதல் விலை
தமிழ்நாடு முழுவதும் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு 7 ரூபாய் முதல் 10 ரூபாய் கொள்முதல் விலையை உயர்த்த கோரி கடந்த 17-ந் தேதி முதல் பால் உற்பத்தியாளர்கள் சார்பில் தொடர்ச்சியாக பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் விலக்கு பகுதியில் தொட்டப்பநாயக்கணூர், இடையபட்டி, இ.புதுப்பட்டி, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 50-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், கறவை மாடுகளுடன் திரண்டு வந்தனர்.
பாலை கொட்டி போராட்டம்
பின்னர் அவர்கள் கறவை மாடுகளுடன் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் பாலை கொட்டி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரியும், ஆவின் மூலம் வழங்கப்படும் தீவணங்களின் விலை உயர்வை கண்டித்தும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.