உசிலம்பட்டி அருகே ஊராட்சி தலைவர், கணவரை கைது செய்யக்கோரி மறியல்


உசிலம்பட்டி அருகே ஊராட்சி தலைவர், கணவரை கைது செய்யக்கோரி மறியல்
x

உசிலம்பட்டி அருகே ஊராட்சி தலைவர், கணவரை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர்

மதுரை

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் தி.மு.க.வை சேர்ந்த வனிதா ராமன். இவரது கணவர் ராமன் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். அதே ஊரில் தேங்காய் வியாபாரம் செய்து வரும் சந்தனகருப்பு என்பவருக்கும், ராமனுக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறின் போது ஊராட்சி மன்ற தலைவர் வனிதா, அவரது கணவர் ராமன் உள்ளிட்ட 5 பேர் சந்தன கருப்புவை தாக்கியதாக கூறப்படுகிறது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதற்கிடையே சந்தனகருப்புவின் மனைவி முருகலெட்சுமி தனது உறவினர்களுடன் உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டார். மேலும் பெட்ரோல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த உசிலம்பட்டி நகர் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். தாங்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய போலீசார் காலம் தாழ்த்தி வருவதாக முருகலட்சுமி குற்றம்சாட்டினார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.


Related Tags :
Next Story