அ.தி.மு.க.வினர் மறியல் போராட்டம்
அ.தி.மு.க.வினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க.வினர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் உதயகுமாரை அங்கீகரிக்காததை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் நேற்று தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று அ.தி.மு.க.வினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மத்திய பஸ்நிலையம் அருகே அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான டி.ரத்தினவேல் தலைமையில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அவர்கள் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்த கண்டோன்மெண்ட் போலீசார் மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வை சேர்ந்த 119 பேரை கைது செய்து, வேனில் ஏற்றி சென்றனர். பின்னர் அவர்கள் அங்குள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு சிறிதுநேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.
ஸ்ரீரங்கம்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஸ்ரீரங்கத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
உப்பிலியபுரம்-லால்குடி
உப்பிலியபுரத்தில் நடந்த போராட்டத்தில் அ.தி.மு.க. தெற்கு, வடக்கு ஒன்றிய செயலாளர்கள், உப்பிலியபுரம், பாலகிருஷ்ணம்பட்டி நகர செயலாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
லால்குடி ரவுண்டானா பகுதியில் நடந்த மறியல் போராட்டத்தில் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
முசிறி-தா.பேட்டை
முசிறி கைகாட்டியில் நடந்த மறியல் போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.செல்வராஜ் உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர். தா.பேட்டை கடைவீதியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.
தொட்டியம்-மணப்பாறை
தொட்டியத்தில் திருச்சி-நாமக்கல் சாலையில் வாணபட்டறை கார்னரில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் ஏலூர்பட்டி தங்கதமிழ்ச்செல்வன் உள்பட 41 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மணப்பாறை மற்றும் கொட்டப்பட்டு பகுதியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மணப்பாறையில் நடந்த போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.