அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை நாசப்படுத்தும் பன்றிகள்


அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை நாசப்படுத்தும் பன்றிகள்
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூரில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை நாசப்படுத்தும் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

திருக்கடையூரில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை நாசப்படுத்தும் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பா சாகுபடி

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் பகுதிகளில் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மேலும் தொடர் மழையில் இருந்து தப்பிய நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

இந்தநிலையில் திருக்கடையூர், சிவகசீந்தாமணி, அபிஷேககட்டளை, ெரயிலடி உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளன. இந்த பன்றிகள், அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பயிர்களை நாசப்படுத்தும் பன்றிகள்

இதுகுறித்து அப்பகுதி விவசாயி மற்றும் பாதுகாப்பு சங்கத் தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது- திருக்கடையூர் பகுதியை சுற்றி 300-க்கும் மேற்பட்ட பன்றிகள் சுற்றித்திரிகின்றன. விளைநிலங்களுக்கு அருகில் கருவேல மரங்கள் அடர்ந்திருக்கும் காட்டுப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு செல்கின்றன. இந்த பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து நெற்பயிர்களை நாசம் செய்கின்றன. பன்றிகள் நடந்து செல்லும்போது நெற்பயிர்கள் சாய்ந்து வயலிலே அழுகி வருகின்றன.

பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்

இரவு நேரங்களில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து நெற்பயிர்களை மேய்கின்றன. மேலும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கிய நிவாரணம் போதுமானதாக இல்லை என்றாலும் எஞ்சிய பயிர்களை அறுவடை செய்து நஷ்டத்தில் இருந்து தப்பிக்கலாம் என நினைத்திருந்தோம்.

ஆனால் இந்த பன்றிகளின் தொல்லையால் பெரு நஷ்டம் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கினறனர். எனவே நெற்பயிர்களை நாசம் செய்யும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story