பாதயாத்திரை பக்தர் சாவு
சத்திரப்பட்டி அருகே வாகனம் மோதி காயம் அடைந்த பழனி பாதயாத்திரை பக்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள செவல்பட்டியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 45). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர், ஊரில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டார். நேற்று முன்தினம் இவர், திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள சிந்தலவாடம்பட்டி பகுதியில் நடந்து வந்தார். அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்று உதயகுமார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உதயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.