பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரிப்பு


பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரிப்பு
x

தைப்பூச திருவிழாவையொட்டி, பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

திண்டுக்கல்

பக்தர்கள் வருகை அதிகரிப்பு

முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தைப்பூசத்திருவிழா தொடங்கியது. வருகிற 5-ந்தேதி தைப்பூசம் நடைபெறுகிறது. இதையொட்டி திண்டுக்கல் வழியாக, பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை, காரைக்குடி, கண்டமனூர், நெற்குப்பை உள்ளிட்ட இடங்களை சேர்ந்த நகரத்தார் குழுவினர் மயில்காவடி எடுத்து பழனி முருகன் கோவிலுக்கு கடந்த 26-ந்தேதி பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

வைரவேல்

தேவகோட்டை நகரத்தார் பள்ளிக்கூடத்தில் இருந்து காவடிகளுக்கு பூஜை செய்து பாதயாத்திரையை தொடங்கிய 300-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வந்தடைந்தனர். நத்தம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள வாணியர் பஜனை மடத்தை வந்தடைந்த இந்த குழுவினர் அங்கு பூஜை நடத்தினர். அதன்பிறகு பெரியகடை வீதி, மூன்றுலாந்தர், பஸ் நிலையம் வழியாக மயில்காவடியுடன் மேளதாளம் முழங்க பழனி நோக்கி புறப்பட்டு சென்றனர்.

அப்போது, முருகனுக்கு செலுத்தி பூஜை செய்யும் வைரவேல் கொண்டு செல்லப்பட்டது. அந்த வேலை பக்தர்கள் வணங்கி அதற்கு பன்னீர், எலுமிச்சை பழம், வண்ணமலர்களை படைத்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து முருகப்பெருமானின் புகழை போற்றும் பாடல்களை பாடி பக்தர்கள் மயில்காவடியை சுமந்து சென்றனர்.

சிறுவர்-சிறுமிகள் ஆர்வம்

இதேபோல் ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, கொட்டாம்பட்டி, நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திண்டுக்கல் வழியாக பழனி முருகன் கோவிலுக்கு நேற்று சென்றனர்.

குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், ஜெயங்கொண்டான் நாட்டார்கள் மயில் காவடி சுமந்து 'அரோகரா' கோஷம் எழுப்பியவாறு சென்றனர். மேலும், சிறுவர்-சிறுமியரும் ஆர்வமுடன் நடந்து சென்றனர்.

நடந்து செல்ல முடியாத சிறுவர்-சிறுமிகளை பெற்றோர்கள் சுமந்தபடியும், கோவிலில் நேர்த்திகடனாக செலுத்துவற்காக வேல் மற்றும் சேவல்களை கையில் ஏந்தியபடியும் நடந்து சென்றனர். பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு வழிநெடுகிலும் டீ, பால், இளநீர், பழங்கள் மற்றும் இரவு உணவும் வழங்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே, மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டன. பக்தர்களுக்கு கழிவறை வசதி செய்யப்படாதால், பெண் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். எனவே வழிநெடுகிலும் கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story