பக்தர்கள் தங்கும் விடுதி பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் பக்தர்கள் தங்குவதற்காக ரூ.1 கோடியில் கட்டப்பட்ட விடுதி வீணாக கிடக்கிறது. இந்த விடுதி எப்ேபாது பயன்பாட்டுக்கு வரும் என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் பக்தர்கள் தங்குவதற்காக ரூ.1 கோடியில் கட்டப்பட்ட விடுதி வீணாக கிடக்கிறது. இந்த விடுதி எப்ேபாது பயன்பாட்டுக்கு வரும் என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
புனித தலம்
பழமையான வேதங்கள் தோன்றிய தலம் திருமறைக்காடு எனும் வேதாரண்யம். புண்ணிய தலமாக கருதப்படும் வேதாரண்யம், தற்போதைய நாகை மாவட்டத்தின் ஒரு நகரமாக திகழ்கிறது. வேதாரண்யத்தில் மிகவும் பழமையான சிவன் கோவில்களுள் ஒன்றான வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது.
7 திருமுறைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே கோவில் வேதாரண்யம் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடைய இக்கோவில் இறைவனை வேதங்கள் பூஜை செய்ததாக தல வரலாறு கூறுகிறது. வேதங்கள் பூஜை செய்து மூடிக்கிடந்த வேதாரண்யேஸ்வரர் கோவில் கதவை அப்பரும், சம்பந்தரும் தேவார பதிகங்கள் பாடி திறந்ததாக கூறப்படுகிறது.
பக்தர்கள் கூட்டம்
அகத்திய மாமுனிவருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி அளித்த இக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.
இப்படி சிறப்பு வாய்ந்த இந்த கோவிலுக்கு வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களிலும், கிருத்திகை, பவுர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்களிலும், அஷ்டமி திதிகளிலும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். இதன் காரணமாக கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
ரூ.1 கோடியில்விடுதி வசதி
இங்குள்ள வேதாரண்யேஸ்வரர், அம்பிகை, துர்க்கையம்மன், பைரவர் உள்ளிட்ட சன்னதிகளில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக உள்ளது. வெளியூர் பக்தர்கள் பெரும்பாலும் வேதாரண்யத்தில் ஒரு நாள் தங்கி இருந்து சிவபெருமானை வழிபட்டு செல்ல விரும்புகிறார்கள்.
ஆனால் பக்தர்கள் தங்குவதற்கு சரியான விடுதி வசதிகள் இல்லை. இந்த நிலையில் தமிழக அரசு சுற்றுலாத்துறை மூலம் வேதாரண்யம் மேலமடவிளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் பக்தா்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டது. இந்த விடுதி கட்டி முடிக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும் பக்தர்களின் பயன்பாட்டுக்காக திறந்து விடப்படவில்லை. காட்சி பொருள் போல யாருக்கும் பயனின்றி இந்த விடுதி வீணாகி வருவதாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
பக்தர்கள் எதிர்பார்ப்பு
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தை கேட்டால் சுற்றுலாத்துறை மூலம் கட்டப்பட்டது, அவர்கள் பணி முடித்து எங்களிடம் ஒப்படைக்கவில்லை. ஒப்படைத்த பிறகு அரசு விதிமுறைப்படி பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என கூறுவதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தனிக்கவனம் செலுத்தி தங்கும் விடுதியை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.