பாத யாத்திரை பக்தர்கள் கூட்டத்தில்கார் புகுந்தது; 2 பேர் பலி


பாத யாத்திரை பக்தர்கள் கூட்டத்தில்கார் புகுந்தது; 2 பேர் பலி
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே பாத யாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்தது. இதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே பாத யாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்தது. இதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

பாத யாத்திரை பக்தர்கள்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாத யாத்திரையாக நேற்று முன்தினம் புறப்பட்டனர்.

நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் அவர்கள் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஜெகவீரபாண்டியபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தனர்.

கார் புகுந்தது

தூத்துக்குடி-மதுரை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டு இருந்த போது, பின்னால் நாசரேத்தில் இருந்து கோவை நோக்கி ஒரு கார் வந்தது. அந்த காரை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயராஜ் என்பவர் ஓட்டி வந்தார்.

கண் இமைக்கும் நேரத்தில் கார், முன்னாள் சென்ற பாத யாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது.

2 பேர் பலி

இந்த கோர விபத்தில் ஆறுமுகநேரி பேயன்விளை புதூர் பகுதியைச் சேர்ந்த சித்திரை முத்துராஜ் மகன் கண்ணன் (வயது 22), காயல்பட்டினம் லட்சுமிபுரத்தை சேர்ந்த துரைராஜ் மகன் சுடலைமுத்து (23) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானதும், லட்சுமிபுரத்தை சேர்ந்த நலன்ராஜ் மகன் அர்ஜூன் (18) என்பவர் படுகாயம் அடைந்ததும் ெதரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக எப்போதும் ெவன்றான் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜின்னா பீர்முகம்மது, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

டிரைவரிடம் விசாரணை

படுகாயம் அடைந்த அர்ஜூனை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான கண்ணன், சுடலைமுத்து ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்களின் உடல்களை பார்த்து பக்தர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த விஜயராஜிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி 2 பக்தர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story