சாலை விரிவாக்க பணியால் குழாய் சேதம்; குடிநீருக்காக அலையும் மக்கள்
அ.காளாப்பூரில் சாலை விரிவாக்க பணியால் குழாய் சேதப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் குடிநீருக்காக பொதுமக்கள் அலைந்து திரிகின்றனர்.
சிங்கம்புணரி,
அ.காளாப்பூரில் சாலை விரிவாக்க பணியால் குழாய் சேதப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் குடிநீருக்காக பொதுமக்கள் அலைந்து திரிகின்றனர்.
குழாய் சேதம்
சிங்கம்புணரியில் இருந்து திருப்பத்தூர் வரை நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் பல இடங்களில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கால்வாய்கள் அனைத்தும் முறையாக அமைக்கப்படவில்லை. இதால் கழிவுநீர் வெளியேற முடியாமல் சாலையில் தேங்கி நிற்கின்றன.மேலும் அ.காளாப்பூர் பெரிய பாலத்திலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள காளாப்பூர் பெண்கள் பள்ளி வரை சாலையின் இடது பக்கத்தில் உள்ள குடிநீர் குழாய்கள் அனைத்தும் சாலை விரிவாக்க பணியால் சேதப்படுத்தப்பட்டு உள்ளது. அதனை இன்று நாள் வரை சீரமைக்கவில்லை.
இதனால் அப்பகுதியில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட மக்கள் குடிநீருக்காக தள்ளுவண்டிகளில் அலைந்து திரிகின்றனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
சீரமைக்க வேண்டும்
கடந்த 2 ஆண்டுகளாக நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று முடிந்துள்ளது. இந்த பணி தொடக்க காலத்திலே சாலையின் இடது பக்கத்தில் உள்ள குடிநீர் குழாய்கள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டது. பணி முடிந்து ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்படவில்லை. இதனால் நாங்கள் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் கொளுத்தும் வெயிலில் அலைந்து திரிய வேண்டிய நிலை உள்ளது. எனவே குழாயை சீரமைத்து முறையாக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு கழிவுநீர் சாலையில் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.