கடலூரில் சுட்டெரிக்கும் கோடைவெயில்:குழாய் வைத்த மண்பானைகள் விற்பனை


கடலூரில் சுட்டெரிக்கும் கோடைவெயில்:குழாய் வைத்த மண்பானைகள் விற்பனை
x

கடலூரில், சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கம் காரணமாக குழாய் வைத்த மண்பானைகள் விற்பனை நடைபெற்று வருகிறது.

கடலூர்

மண்பானை

கடலூரில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. சமீபத்தில் 101 டிகிரியை தாண்டி வெயில் அடித்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் பெய்த மழை சற்று ஆறுதலை தந்தது. நேற்றும் பெரிய அளவில் வெயிலின் தாக்கம் இல்லை. இருப்பினும் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

இருப்பினும் வெயிலில் இருந்து தப்பிக்க குளிர்பானங்கள், இளநீர், நுங்கு, தர்பூசணி, சர்பத், கரும்பு சாறு விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. இதற்கிடையில் மண்பானை விற்பனையும் நடந்து வருகிறது. சாதாரண மண்பானை, குழாயுடன் கூடிய மண்பானை, மூடி, ஜாடி, டம்ளர் என மண்பாண்டங்களில் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ரூ.300-க்கு விற்பனை

சாதாரண மண்பானை ரூ.200-க்கும், குழாய் வைத்த மண்பானை ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். இருப்பினும் போதிய விற்பனை இல்லை என்று விற்பனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது பற்றி கடலூர் சாவடியை சேர்ந்த மண்பானை வியாபாரி சுரேஷ் கூறுகையில், கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்து உள்ளது. இதனால் பிரிட்ஜ் வசதி இல்லாத மக்கள், குளிர்ந்த நீரை பருக மண்பானைகளை தான் வாங்கி செல்வார்கள். ஆனால் மழை பெய்ததால் சற்று விற்பனை மந்தமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு 10 மண்பானைகள் கூட விற்பனையாக வில்லை.

இருப்பினும் வெயில் அதிகரிக்க, அதிகரிக்க மண்டபானைகளின் தேவை அதிகமாக இருக்கும். அப்போது விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். மண்பானை தயாரிக்க தேவையான மண் விலையும் அதிகமாக இருக்கிறது. இதனால் கஷ்டப்பட்டு தான் தயாரித்து விற்பனை செய்கிறோம் என்றார்.


Next Story