ஓமலூர் அருகே குழாயில் உடைப்பு: நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிறது பள்ளத்தில் தேங்கும் தண்ணீரை வீடுகளுக்கு பயன்படுத்தும் அவலம்
ஓமலூர் அருகே காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி சாக்கடை கால்வாயில் கலக்கிறது. இதனால் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பள்ளத்தில் தேங்கும் தண்ணீரை வீடுகளுக்கு பொதுமக்கள் பிடித்து செல்லும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது.
ஓமலூர்,
குடிநீர் குழாய் உடைப்பு
காடையாம்பட்டி காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்திற்கு உட்பட்ட கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஓமலூரில் இருந்து காமலாபுரம், பொட்டியபுரம் வழியாக சர்க்கரைசெட்டிபட்டி வரை காவிரி குடிநீர் செல்கிறது.
இதில் பொட்டியபுரம் கிராமத்தில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறுகிறது. இதை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததால் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அதில் இருந்து தண்ணீர் திறந்து விடும் நாட்களில் நாள்தோறும் சுமார் 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் வெளியேறி வீணாக சாக்கடை கால்வாயில் கலக்கிறது.
மேலும் சாக்கடை நீரும் குடிநீரில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே பொட்டியபுரம் கிராமத்தில் குடிநீர் கேட்டு பலமுறை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் நடைபெற்று வந்த நிலையில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் லிட்டர் மேலான குடிநீர் வீணடிக்கப்படுவதற்கு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோரிக்கை
மேலும் அந்த பகுதி பொதுமக்களுக்கு வாரம் ஒரு முறை மட்டுமே குடிநீர் வருகிறது. இந்தநிலையில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறும் தண்ணீரை அப்பகுதி மக்கள் பள்ளத்தில் இருந்து வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்த குடங்களில் எடுத்து செல்கின்றனர். மேலும் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.