நாகூர் துறைமுகத்தில் பைபர் படகு, வலைகளுக்கு தீவைப்பு
மீன் விற்பதில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக நாகூர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகு, வலைகளுக்கு தீவைக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
நாகூர்:
மீன் விற்பதில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக நாகூர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகு, வலைகளுக்கு தீவைக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீன் விற்பதில் பிரச்சினை
நாகை மாவட்டம் நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதில் மேலபட்டினச்சேரி மற்றும் கீழப்பட்டினச்சேரி மீனவர்களுக்கு இடையே பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த மாதம் 15-ந்தேதி மீண்டும் அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது.
அப்போது கடலுக்கு சென்று பிடித்து வந்த மீன்களை சாலையில் கொட்டி மேலபட்டினச்சேரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அனுமதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் மேலபட்டினச்சேரி மீனவர்களுக்கும் நாகூர் துறைமுகத்தில் மீன் விற்பனை செய்யவும், ஏலம் விடவும் சம உரிமம் அளிக்க வேண்டும் என்று பேசி முடிக்கப்பட்டது.
பொருட்கள் உடைப்பு
இதற்கிடையே கடந்த 18-ந் தேதி நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேலப்பட்டினச்சேரி மீனவர்களின் 7 படகுகளில் இருந்த என்ஜின்களை மர்ம நபர்கள் வெட்டாற்றில் வீசி சென்றனர். இதை தொடர்ந்து நாகூர் துறைமுகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடந்த 5-ந்தேதி இரவு மேலபட்டினச்சேரி மீனவ கிராம நிர்வாகிகள் 2 பேரை மற்றொரு தரப்பு மீனவர்கள் தாக்கினர்.
மேலும் மேலபட்டினச்சேரியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களையும், இருசக்கர வாகனங்களையும் அடித்து உடைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மேலபட்டினச்சேரி மீனவர்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்தியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகூர்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் வெட்டாற்று பாலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மேலபட்டினச்சேரி, கீழபட்டினச்சேரி ஆகிய கிராமங்களில் அதிவிரைவுப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பைபர் படகுக்கு தீவைப்பு
இந்த நிலையில் நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கீழபட்டினச்சேரியை சேர்ந்த விஜி என்பவரின் பைபர் படகுக்கு நேற்று அதிகாலையில் மர்ம நபர்கள் தீவைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படகில் இருந்த மீன்பிடி வலைகள், ஐஸ் பெட்டி உள்ளிட்ட தளவாட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. அதன்சேதமதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த தகவலை அறிந்த கீழபட்டினச்சேரியை சேர்ந்த மீனவ பெண்கள், துறைமுகத்துக்கு வந்து எரிந்த படகை பார்த்து கதறி அழுதனர். அப்போது படகுக்கு தீவைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
போலீசார் குவிப்பு
இதுகுறித்த புகாரின் பேரில் நாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இருதரப்பு மீனவர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுக்கு தீவைக்கப்பட்டதால் இரு மீனவ கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க அதிவிரைவுப்படை போலீசார் குவிக்கப்பட்டு நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தலைமையில் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.