விவசாய நிலங்களில் தோண்டப்பட்ட திடீர் குழிகள்


விவசாய நிலங்களில் தோண்டப்பட்ட திடீர் குழிகள்
x

விவசாய நிலங்களில் ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சிவகங்கை

மானாமதுரை,

மானாமதுரை அருகே கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் சுமார் 4 அடி ஆழத்திற்கு ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

குழிகள்

மானாமதுரை அருகே செய்களத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட புளிச்சிக்குளம், கள்ளவர்வலலை, செய்களத்தூர் ஆகிய பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசிற்கு சொந்தமான வாகனங்களில் வந்த சிலர் விவசாய நிலத்தில் ஆங்காங்கே சுமார் 4 அடி ஆழத்திற்கு குழிகள் தோண்டி ஆராய்ச்சி செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அந்த விவசாய நில உரிமை யாளர்கள் வேகமாக அங்கு வந்து அவர்களிடம் விசாரித் தனர். ஆனால் அவர்கள் இந்தி மொழியில் பேசியதால் விவசாய நில உரிமையாளர்களுக்கு அதுகுறித்து புரியவில்லை. இதையடுத்து அந்த வாகனத்தில் வந்தவர்கள் அங்கிருந்து சென்றனர். அதன் பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகளின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் முருகன் தலைமையில் விவசாயிகள் அங்கு வந்து குழிகளை பார்வையிட்டனர்.

தட்டுப்பாடு

பின்னர் இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- ஏற்கனவே மானாமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள வைகையாற்று பகுதியில் மணல் எடுப்பதற்காக அரசு சார்பில் மணல் குவாரி அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த வைகையாற்று பகுதியில் மணல் எடுத்தால் விவசாயம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயிகள் சார்பில் நாங்கள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினோம். அதன் பின்னர் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது இங்குள்ள விவசாய நிலங்களில் ஆங்காங்கே சுமார் 4 அடி ஆழத்திற்கு சுரங்கப்பாதைபோல் வடமாநிலத்தில் இருந்து மத்திய அரசு வாகனங்களில் வந்த நபர்கள் விவசாய நில உரிமையாளர்களிடம் எவ்வித அனுமதியும் கேட்காமல் குழிகளை தோண்டி உள்ளனர்.

நடவடிக்கை

இதனால் இந்த பகுதியில் விவசாயத்தை பாதிக்கும் வகையில் ஓ.என்.சி போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் எரிவாயு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் ஆகிய திட்டத்தை இங்கு கொண்டு வர உள்ளார்களா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இந்த திட்டம் இங்கு கொண்டு வந்தால் விவசாயம் முற்றிலும் அழிந்து விடும். எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story