கூடலூர் அருகே பரிதாபம்: மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; ராணுவ வீரர் உள்பட 3 பேர் பலி


கூடலூர் அருகே பரிதாபம்:  மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; ராணுவ வீரர் உள்பட 3 பேர் பலி
x

கூடலூர் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ராணுவ வீரர் உள்பட 3 ேபர் பலியாகினர்.

தேனி

ராணுவ வீரர்

தேனி மாவட்டம் கூடலூர் 2-வது வார்டு பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த லோகேந்திரன் மகன் லியோ சிம்மன் (வயது 23). கூலித்தொழிலாளி. இவரது நண்பரான மேலக்கூடலூர் கன்னிகாளிபுரம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மகன் தர்மராஜ் (23). இவர் லடாக்கில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவர், தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

இன்று மாலை இருவரும் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார்சைக்கிளில் கம்பத்திற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் கூடலூருக்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை லியோ சிம்மன் ஓட்டி சென்றார்.

மோட்டார்சைக்கிள்கள் மோதல்

நாமக்கல் மாவட்டம் போத்தனூர் அரசன்காட்டு தெருவை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் கூடலூரில் இருந்து மோட்டார்சைக்கிளில் கம்பத்திற்கு வந்து கொண்டிருந்தார். கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் துர்க்கை அம்மன் கோவில் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கண் இமைக்கும் நேரத்தில் 2 மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதின.

இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராஜேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா, கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

3 பேர் பலி

பின்னர் விபத்தில் பலியான ராஜேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பாிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் படுகாயமடைந்த லியோ சிம்மன், தர்மராஜ் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான ராஜேஷ்குமார் என்ன வேலை செய்கிறார், எதற்காக நாமக்கல்லில் இருந்து கம்பத்திற்கு சென்றார் என்பது தெரியவில்லை. அவரது சட்டை பையில் இருந்த ஓட்டுனர் உரிமத்தை வைத்துதான் நாமக்கல்லை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

மேலும் லியோ சிம்மன், தர்மராஜ் ஆகிய 2 பேர் திருமணமாகாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story