சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு


சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு
x

ஊட்டி அருகே சிறுத்தை தாக்கி சிறுமி பலியான விவகாரத்தில், சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி வடக்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட தேனாடுகம்பை பிரிவு அரக்காடு பகுதியில் பாலன் என்பவருக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் பலர் குடும்பத்துடன் தங்கி இருந்து பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 10-ந் தேதி அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி நிஷாந்த் என்பவரது மகள் சரிதா (வயது 4) தேயிலை தோட்டத்தில் நின்றிருந்தாள். அப்போது சிறுத்தை தாக்கியதில் சரிதா படுகாயம் அடைந்தாள். அவளை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சிறுத்தை தாக்கி சிறுமி இறந்ததால், அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதனால் வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கவும் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் சச்சின் போஸ்லே துக்காராம் உத்தரவின் பேரில் அரக்காடு பகுதியில் 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இதில் அப்பகுதியில் சிறுத்தை நடமாடியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதைத்தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் கூண்டு வைக்கப்பட்டு உள்ளது.


Next Story