விழுப்புரம் நகராட்சியில் தூய்மைப்பணிக்கான திட்டம் அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்
விழுப்புரம் நகராட்சியில் தூய்மைப்பணிக்கான திட்டத்தை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்,
மாபெரும் தூய்மைப்பணி
விழுப்புரம் நகராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம், விழிப்புணர்வு முகாம் மற்றும் மாபெரும் தூய்மைப்பணிக்கான திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு மாபெரும் தூய்மைப்பணிக்கான திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஆரோக்கியத்துடன் வாழலாம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுச்சுழல் தூய்மையாக இருந்தால் தான் முழு சுகாதாரத்துடன் இருக்க முடியும் என்பதை வலியுறுத்தி அனைத்து நகரப்பகுதிகளிலும் தூய்மைப்பணியை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். அந்த வகையில் நாம் வசிக்கும் பகுதியை நாம் தூய்மையாக வைத்துக்கொள்ளும்போது நகர் முழுவதும் தூய்மையாக மாறிவிடும். தூய்மையை கடைபிடிப்பதால் நாம் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட முடியும். இந்த நோக்கத்துடன் ஒவ்வொருவரும் நாள்தோறும் குப்பைகளை வெளியில் போடுவதை தவிர்த்து வீட்டில் சேரும் குப்பைகளை வீட்டிலேயே தரம் பிரித்து தூய்மைப்பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
'என் குப்பை - என் பொறுப்பு"
பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தக்கூடிய குப்பைகளை 'என் குப்பை - என் பொறுப்பு" என்ற நிலையை உணர்ந்து ஒவ்வொருவரும் குப்பைகளை சேகரிக்கும் இடங்களில் விட்டுச்செல்லும் போது தூய்மைப்பணியாளர்கள் எடுத்து அப்புறப்படுத்துவதற்கு எளிதாக அமையும்.
முதல்-அமைச்சரின் எண்ணம் நிறைவேறும் வகையில் 'என் நகரம் - என் பெருமை" என்ற நிலையை உருவாக்கிடும் வகையில் நாம் அனைத்து பகுதிகளிலும் தூய்மையை கடைபிடித்து சுகாதாரத்துடன் வாழ்ந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழிப்புணர்வு
அதைத்தொடர்ந்து வீடுகள் தோறும் சென்று பொதுமக்களை சந்தித்து குப்பைகள் தேங்காத வண்ணம் பாதுகாத்துக்கொள்வதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
விழாவில் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.