நடப்பு சம்பா பருவத்துக்காக 150 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க திட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்துக்காக 150 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்துக்காக 150 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள்
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் பால் பண்ணை பகுதியில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இருதய சிகிச்சை மருத்துவ முகாமை அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் முகாமுக்கான பயிற்சி வகுப்பினை பார்வையிட்டு மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
கொள்முதல் நிலையங்கள்
தொடர்ந்து அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்துக்காக 150 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றில் இதுவரை 85 நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டு மக்களின் மிகப்பெரிய நம்பிக்கையாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்வதால் ஈரோடு சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி அடையும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நிவேதா முருகன் எம்.எல்.ஏ., நகர சபை தலைவர் செல்வராஜ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.