ஒப்புதல் கிடைத்து விரைவில் நடைமுறைக்கு வருகிறது: வங்கிகளை வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயக்க திட்டம் ஆதரவும் இருக்கிறது... எதிர்ப்பும் கிளம்புகிறது...


ஒப்புதல் கிடைத்து விரைவில் நடைமுறைக்கு வருகிறது:  வங்கிகளை வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயக்க திட்டம்  ஆதரவும் இருக்கிறது... எதிர்ப்பும் கிளம்புகிறது...
x

வங்கிகள் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயங்குவதற்கான ஒப்புதல் கிடைத்து விரைவில் நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதற்கு அதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் கிளம்புகிறது.

சேலம்

சேலம்,

வங்கி சேவைகள்

பணப்பரிமாற்றங்களுக்கு அடித்தளமாக இருப்பது வங்கிச்சேவைகள் மட்டுமே. முன்பெல்லாம் ஒருவர் வங்கிச்சேவையை பெற வேண்டும் என்றால், நீண்டநேரம் வங்கிகளில் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது வங்கி கணக்குகள் வைத்திருந்தவர்களின் எண்ணிக்கையும் வெகு சொற்பமாக இருந்தது. இது நாளடைவில் மாற்றம் கண்டது. மத்திய-மாநில அரசுகளின் அனைத்து திட்டங்களையும் பெறுவதற்கு வங்கிக்கணக்கு மிக முக்கியமானதாக ஆனது.

இதன் காரணமாகவும், சேமிப்பு பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்ததாலும் இப்போது வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்கேற்றாற்போல், வங்கிச்சேவைகளை எளிதாக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில், டிஜிட்டல் பரிமாற்றங்கள் தான் இப்போதைய வங்கி சேவையில் முதன்மைப் படுத்தப்படுகின்றன.

வாரத்துக்கு 5 நாட்கள்

என்ன தான் டிஜிட்டல் முறையில் சேவைகள் வழங்கப்பட்டாலும், சில தேவைகளுக்கு நேரடியாக வங்கியை அணுகவேண்டிய நிலை இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. அந்தவகையில் அனைத்து தரப்பு மக்களும் அவ்வப்போது வங்கியை நாடவேண்டிய நிலை உள்ளது. தற்போது வரை வங்கிகளுக்கு மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை நாட்களிலும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுதவிர மாதத்தில் 2 மற்றும் 4-வது வார சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மற்ற அனைத்து நாட்களிலும் மக்கள் வங்கிகளை நேரடியாக அணுகி சேவையை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் விடுமுறைக்கான ஒப்புதல் பெற முயற்சிகள் நடந்து வருகின்றன. அதன்படி, இனி வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் இயங்கும் நிலை உருவாகி இருக்கிறது. வங்கி ஊழியர்கள் சங்கத்தினர், இந்திய வங்கிகள் சங்கத்துடனான (ஐ.பி.ஏ.) இருதரப்பு ஒப்பந்தத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட உள்ளது.

விரைவில் ஒப்புதல் கிடைத்து நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே கூறப்படுகிறது. அவ்வாறு சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டாலும், அந்த 2 வார சனிக்கிழமை வேலைநாட்களை மற்ற நாட்களில் கூடுதல் நேரத்தில் பணி செய்து நிவர்த்தி செய்யப்படும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்கு மாதத்தில் 2,4-வது வார சனிக்கிழமைகள் தவிர்த்து மற்ற சனிக்கிழமைகளில் வங்கிக்கு நேரில் சென்று நகைக்கடன் பெற முடிந்தது. வங்கி ஏ.டி.எம். சேவைகளில் பணம் வராமல் நின்று விட்டால் சனிக்கிழமைகளில் வங்கி செயல்பட்டால் உடனடியாக நேரில் அணுகி பணத்தை திரும்ப பெற முடியும். இல்லையேல் ஆன்லைனில் புகார் அளித்து தானாக பணம் திரும்ப வரும் வரை அவசர தேவைக்கு தடுமாறும் நிலையும் ஏற்படும்.

எனவே பணமில்லா பரிவர்த்தனை முழுமையாக சாத்தியமாகும் காலக்கட்டத்தில் வங்கிகளின் விடுமுறை நாட்களை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கலாம். இல்லையேல் நடைமுறை சிக்கலால் மக்கள் தான் சிரமத்துக்கு உள்ளாவார்கள்.

நீண்டநாள் கோரிக்கை

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இதற்கு தற்போது எழுந்துள்ள ஆதரவும், எதிர்ப்பும்வருமாறு:- வங்கி அதிகாரி தீனதயாளன்:- ஆட்கள் குறைப்பு, மன அழுத்தம், வேலை பளு அதிகம் இவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு வங்கியில் வாரத்தில் 5 நாட்கள் வேலை நாட்களாக (காப்பீட்டு நிறுவனத்தை போல்) அறிவிக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். இந்த கோரிக்கையை முதன் முதலாக முன்னெடுத்தது வங்கி அதிகாரிகள் சங்கம் தான். வங்கிகளை வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயக்க திட்டத்துக்கு ஊழியர்கள், அதிகாரிகள் வரவேற்பார்கள் என்பது சந்தேகமில்லை. வெளியில் இருந்து பார்க்கும் போது அனைத்து சனிக்கிழமையும் விடுமுறையா? என்று நினைக்க தோன்றும். ஆனால் அந்த நாள் இழப்பை ஈடுகட்டும் வகையில் மற்ற நாட்களில் வேலை நேரத்தை 30 நிமிடம் வரை அதிகரிக்கப்படும். தற்போது பெரும்பாலான வங்கி சேவைகள் ஆன்லைன் (டிஜிட்டல்) முறையில் கொண்டுவரப்பட்டு விட்டன. எனவே வங்கி சேவைகளை நேரடியாக வந்து பெறுவது என்பது இனி குறைவாகவே இருக்கும்.

மாலை 5 மணி வரை....

தனியார் அலுவலகத்தில் வங்கி தொடர்பான பணிகளை கவனிக்கும் செந்தில்:- வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வங்கிகள் செயல்படும் என்பது எங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எவ்வளவுதான் ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றங்கள் செய்யப்பட்டாலும், காசோலை பரிமாற்றம் உள்பட சில சேவைகளுக்காக தினமும் வங்கிகளுக்கு சென்று வரும் நிலை இருக்கிறது. ஏற்கனவே மாதத்தில் 2 மற்றும் 4-வது வார சனிக்கிழமைகளில் அளிக்கும் விடுமுறையே எங்களுக்கு கஷ்டமாக உள்ளது. தற்போது அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை என்றால் எங்களுக்கு தான் கூடுதல் சுமையாகும். எனவே பழைய நடைமுறையே தொடர்ந்து பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

கல்வியாளர் வின்சென்ட் தெ பவுல்:- எந்த ஒரு துறையிலும் மாற்றம் என்பது வளர்ச்சியை நோக்கி செல்வதாக இருந்தால் வங்கிகள் 5 நாட்கள் இயக்க திட்டம் வரவேற்க கூடியது ஆகும். இன்றைய உலகில் பெரும்பாலானோர் யு.பி.ஐ. மூலம் பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர். எனவே இந்த முடிவால் மக்களுக்கு பெரியளவு பாதிப்பு ஏற்படாது. தற்போது வங்கிகளில் 3½ மணி வரை பண பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இதை மாலை 5 மணி வரை நீட்டித்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட அனைவரும் பயன் அடைவார்கள்.

சரியாக இருக்காது

எலக்ட்ரிக் ஹார்டுவேர் தொழில் செய்து வரும் ராஜ்குமார்:- நான் பல ஆண்டுகளாக எலக்ட்ரிக் ஹார்டுவேர் தொழில் செய்து வருகிறேன். வாரத்தின் இறுதி நாட்களில் தான் பெரும்பாலான நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு கூலி வழங்கி வருகிறோம். எங்களுக்கும் கட்டிட காண்டிராக்டர்கள் மூலம் வரவேண்டிய பணம் வந்து சேரும். அவர்கள் காசோலையாக வழங்குவதால் அதனை வங்கியில் கொடுத்து பணமாக மாற்றி தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுத்து வருகிறோம். இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வங்கிகள் செயல்படும் என்றால் தொழில் முறையில் சிக்கல் ஏற்படும். தொழிலாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக நேரிடும். எனவே வங்கிகள் வாரத்தில் 6 நாட்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணத்தட்டுப்பாடு ஏற்படும்

தனியார் பள்ளி ஆசிரியை லட்சுமி பிரபா:- வங்கிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை என்பது நிச்சயம் பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பல நிறுவனங்களில் ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை வங்கிகளில் தான் செலுத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் சம்பளம் வழங்கும் நாள் சனிக்கிழமை என்றால் அன்றைய தினம் அவர்களால் பணம் செலுத்த முடியாது. ஒரு நாள் முன்னதாக சம்பளம் கொடுக்கவும் பெரும்பாலான நிறுவனங்கள் முன்வராது. இந்த நேரங்களில் நாங்கள் பணம் எடுத்து குடும்ப தேவைக்காக செலவழிக்க மிகவும் சிரமம் அடைவோம். இன்றும் பல ஏ.டி.எம். மையங்களில் பல்வேறு பிரச்சினைக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் பணம் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதே நிலை சனிக்கிழமை தொடர்ந்தால் பொதுமக்கள் மேலும் அவதியடைவார்கள். வாரத்தில் ஒருநாள் ஓய்வே வங்கிகளுக்கு போதுமானது. வங்கி ஊழியர்களுக்கு சலுகை என்ற பெயரில் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திவிடக்கூடாது. எனவே இந்த நடைமுறை தேவையில்லாதது. பெரும் சிக்கலையும் ஏற்படுத்தக்கூடியது. எனவே இந்த புதிய நடைமுறை வேண்டாமே!. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story