ஒரேநாளில் 20 லட்சம் பனை விதைகள் நட திட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 20 லட்சம் பனை விதைகள் நடுவதற்து திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 20 லட்சம் பனை விதைகள் நடுவதற்து திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
கிராமசபை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த கடப்பேரி ஊராட்சியில் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் கிராமத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், செலவினம் மற்றும் ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகள், அது குறித்த செலவினம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிலவரம், பள்ளி கழிவறைகள் மற்றும் அங்கன்வாடி மைய கழிவறைகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து ஊராட்சி செயலாளர் பொது மக்களுக்கு தெரிவித்தார். 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:-
20 லட்சம் பனை விதைகள்
பொதுமக்கள் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணை கிடைக்கப்பெற்றவுடன் அதனை குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடித்திட வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதிகமான மரங்களை வளர்க்க முன்வர வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 20 லட்சம் பனை விதைகளை நடுவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் திட்டமிட்டுள்ளோம். எனவே பனை விதைகளை சேகரியுங்கள்.
கிராமப்புறங்களில் பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும். கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத் திட்டங்கள் எளிதில் கிடைத்திட முகாம்கள் தொடர்ந்து வாரம் வாரம் நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவர்கள் கஞ்சா பழக்கங்களில் சிக்கி வருகின்றனர். கிராமத்தில் உள்ள தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் எந்த செயல்கள் செய்கின்றனர் என்பதை கண்காணியுங்கள். பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் சாக்லேட் போன்ற தின்பண்டங்கள் எந்த வடிவில் வழங்கப்படுகிறது என்பதை கண்காணிக்க வேண்டும். பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை அறிந்தால் தகவல் தெரிவியுங்கள்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கலந்துகொண்டவர்கள்
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, கோட்டாட்சியர் பூங்கொடி, மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் ஜெயந்தி, வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், உதவி திட்ட இயக்குனர் குமார், தாசில்தார் ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி நன்றி கூறினார்.
இதனை தொடர்ந்து கலெக்டரிடம் பொதுமக்கள் மனுக்களை கொடுத்தனர். முன்னதாக அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள விடுதலை போராட்ட வீரர் ஜமதகனி உருவ கட்வெட்டிற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.