25 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டம்
25 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டம்
தஞ்சை மாநகரில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது என மேயர் சண்.ராமநாதன் தகவல் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் மரக்கன்று நடும் திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம், உதவி பொறியாளர் சந்திரபோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காணிப்பாளர் கிளமெண்ட் அந்தோணிராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் மேயர் சண்.ராமநாதன் பேசியதாவது:-
நகர்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் விதமாக தனிநபர் வேலைவாய்ப்பு திட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் முதல் தவணையாக தஞ்சை மாநகராட்சியில் உள்ள மண்டலம் 3-க்கு உட்பட்ட வார்டு எண்: 29 முதல் 41 வரையிலான பகுதிகளில் 7 எண்ணிக்கையிலான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ரூ.1½ கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
25 ஆயிரம் மரக்கன்றுகள்
இதன்படி, மண்டலம் 3-க்கு உட்பட்ட வார்டு எண்: 29 முதல் 41 வரையிலான பகுதிகளில் மரம் வளர்க்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு அப்பகுதிவாழ் பொதுமக்கள் மட்டுமே பணியாளர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ.363 மதிப்பூதியமாக நேரடியாக பணியாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளானது மரக்கன்றுகள் நடுவதற்கு குழி ஏற்படுத்துதல், மரக்கன்றுகள் நடுதல், 50 நாளைக்கு குடிநீர் விட்டு பராமரித்தல் ஆகும். மாநகராட்சி மூலம் 25 ஆயிரம் மரக்கன்றுகள் கொள்முதல் செய்யப்படும். குடிநீர் வினியோகம் செய்யப்படும். சுமார் 4 ஆயிரம் எண்ணிக்கையிலான மரக்கூண்டுகள் கொள்முதல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.