உதயகிரி கோட்டையில் மர பாலத்தை சீரமைக்க ஏற்பாடு
உதயகிரிகோட்டையில் மர பாலத்தை சீரமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வனத்துறையினருக்கு கலெக்டர் ஸ்ரீதர் அறிவுரை கூறினார்.
நாகர்கோவில்:
உதயகிரிகோட்டையில் மர பாலத்தை சீரமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வனத்துறையினருக்கு கலெக்டர் ஸ்ரீதர் அறிவுரை கூறினார்.
உதயகிரி கோட்டை
பத்மநாபபுரம் நகராட்சிக்கு உட்பட்ட புலியூர்குறிச்சி அருகில் உள்ள உதயகிரி கோட்டையை கலெக்டர் ஸ்ரீதர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டம் சுற்றுலா தலங்கள் அதிகமுள்ள மாவட்டமாகும். குறிப்பாக கன்னியாகுமரி கடற்கரை, லெமூரியா கடற்கரை, பூம்புகார் படகுதளம், திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை புரிகிறார் கள். இந்த சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கு பல்வேறு முன் வரைவு திட்டங்கள் தயார் படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக பல ஆண்டுகளுக்கு முன்பு படைவீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட உதயகிரி கோட்டையினை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உதயகிரி கோட்டை வளாகத்தில்
ரூ.32 லட்சத்தில் அம்ரூத் திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்படவுள்ள பூங்கா பணிகள் மற்றும் ரூ.13 லட்சத்தில் வளாகத்தில் உள்ள குளத்தை தூர்வாரும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலை உணவுத்திட்டம்
உதயகிரி கோட்டை வளாகத்தை தூய்மைப்படுத்துவது, மர பாலத்தை சீரமைப்பது தொடர்பான திட்டத்தை வகுத்திட வனத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. வளாகத்திலுள்ள மீன் அருங்காட்சியகத்தை மேம்படுத்துவது, அதிகமான விலங்குகள், பறவைகளை இங்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை குறித்தும் கேட்டறியப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திடவும் வனத்துறை உள்ளிட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட பிரம்மபுரம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சமையலறைக் கூடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இச்சமையலறை பயன்பாட்டிற்கு வரும்போது பத்மநாபபுரம் நகராட்சி விலவூர், திருவிதாங்கோடு, இரணியல், வில்லுக்குறி ஆகிய 4 பேரூராட்சிக்குட்பட்ட 20 பள்ளிகளை சேர்ந்த சுமார் 1,900 மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் லெனின் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.