வரி வசூலுக்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் பயன்படுத்த திட்டம்: முதன்மை தலைமை கமிஷனர் தகவல்


வரி வசூலுக்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் பயன்படுத்த திட்டம்: முதன்மை தலைமை கமிஷனர் தகவல்
x

வருமான வரி செலுத்துவோருக்கு பயனுள்ள வகையில் இருப்பதற்காக வருமான வரி வசூல் மேம்பாட்டுக்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் பயன்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன என்று முதன்மை தலைமை கமிஷனர் சுனில் மாத்தூர் கூறினார்.

சென்னை,

சென்னை வருமான வரித்துறை சார்பில் 164-வது வருமான வரித்துறை தின விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவுக்கு சென்னை முதன்மை தலைமை கமிஷனர் சுனில் மாத்தூர் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு, புதுச்சேரிக்கான புதிய மேம்படுத்தப்பட்ட தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளுடன் கூடிய இணையதள சேவையை, சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் பேராசிரியர் வி.காமகோடி தொடங்கிவைத்தார்.

விழாவில் முதன்மை தலைமை கமிஷனர் சுனில் மாத்தூர் பேசியதாவது:-

இழப்பீடுகளை சரி செய்ய வரி விதிப்பு

நம் நாட்டில் சர் ஜேம்ஸ் வில்சன் என்பவர் 1890-ம் ஆண்டு ஜூலை 24-ந் தேதி வருமான வரி விதிப்பு முறையை கொண்டு வந்தார். 1857-ம் ஆண்டு நடைபெற்ற முதல் சுதந்திர போராட்டத்தின் போது, ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்ட இழப்பீடுகளை சரி செய்ய வருமான வரி விதிப்பு முறை கொண்டுவரப்பட்டது. சுதந்திர இந்தியாவில் முதல் வருமான வரி சட்டம் 1961-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

வருமான வரித்துறையில் வசூல் மற்றும் நிர்வாகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நான் 1995-1996-ம் ஆண்டில் வருமான வரித்துறையில் பணியை தொடர்ந்த போது, மொத்த வரி வசூல் ரூ.35 ஆயிரம் கோடியாக இருந்தது. மொத்த வரி வருவாயில், நேரடி வரி வருவாய் 30 சதவீதமாக இருந்தது. அதன்பிறகு, 2009-2010-ம் ஆண்டுகளில், அதன் தொகை 60 சதவீதம் வரையில் அதிகரித்தது.

வரி வசூலில் 4-வது இடம்

2022-23-ம் நிதியாண்டில் வருமான வரி வசூல் ரூ.165.6 லட்சம் கோடியாக இருந்தது. இது, நேரடி வருவாய் முந்தைய ஆண்டை காட்டிலும் 17 சதவீதம் அதிகமாக இருந்தது. தனி நபர் வருவான வரி மற்றும் கார்ப்பரேட் வருமான வரி உள்ளடக்கிய நேரடி வரி, மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் பெரும்பகுதியாக உள்ளது. இது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்கு முக்கிய பங்காற்றுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரி வசூல் கணிசமாக உயர்ந்துள்ளது. 2022-2023-ம் நிதியாண்டில், ரூ.1.08 லட்சம் கோடி நிகர வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் 20 சதவீதம் அதிகமாகும். கடந்த நிதியாண்டு வருமான வரி வசூலில், மும்பை, பெங்களூரு, டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழகம் மற்றும் புதுச்சேரி வரி வசூலில் 4-வது இடத்தில் உள்ளது.

செயற்கை நுண்ணறிவு

வருமான வரித்துறை, பொதுமக்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தல், திரும்ப பெறுவதற்கு (டிடிஎஸ் ரிட்டன்) எளிமையாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து வருமான வரித்துறை செயல்படுகிறது. வருமான வரி வசூல் மேம்பாட்டுக்காக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. இது, வருவான வரி செலுத்துவோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முதன்மை கமிஷனர்கள் ஜெயந்தி கிருஷ்ணா, டி.என்.கர், கிருஷ்ண முரளி மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story