11 ஆண்டுகளுக்குப்பிறகு புதிதாக தேர்வான திட்டக்குழு உறுப்பினர்கள் அறிமுக கூட்டம்
தஞ்சையில் 11 ஆண்டுகளுக்குப்பிறகு புதிதாக தேர்வான திட்டக்குழு உறுப்பினர்கள் ஆறிமுக கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. இதில் திட்டக்குழு தலைவர், கலெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சையில் 11 ஆண்டுகளுக்குப்பிறகு புதிதாக தேர்வான திட்டக்குழு உறுப்பினர்கள் ஆறிமுக கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. இதில் திட்டக்குழு தலைவர், கலெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
திட்டக்குழு கூட்டம்
தஞ்சை மாவட்ட திட்டமிடும் குழு கூட்டம் பனகல் கட்டிடத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிக்குழு கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட திட்டக்குழு தலைவரும், மாவட்ட ஊராட்சி தலைவருமான உஷாபுண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். துணைத்தலைவரும், மாவட்ட கலெக்டருமான தீபக்ஜேக்கப், கல்யாணசுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மேயர்கள் சண்.ராமநாதன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சி செயலர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.
தஞ்சை மாவட்ட திட்டக்குழுக்கு உறுப்பினர்கள் தேர்வு கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பின்னர் திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவில்லை. தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திட்டக்குழுவுக்கு தேர்தல் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு கூட்டம் நேற்று நடைபெற்றது.
12 உறுப்பினர்கள் அறிமுகம்
இதில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களான 8 பேர் (ஊரகப்பகுதியை சேர்ந்தவர்கள்) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். நகர்ப்புற பகுதியை சேர்ந்த 4 உறுப்பினர்கள் மட்டும் தேர்தல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி திட்டக்குழு உறுப்பினர்களான ஊரகப்பகுதியை சேர்ந்த சரவணன், முரளி, தாமரைச்செல்வன், பரிமளம் ஜெயராமன், உதயன், சுபா, செந்தாமரை, மூர்த்தி, நகரப்பகுதியை சேர்ந்த சசிகலா, சாகுல்அமீது, ரவிக்குமார் சுந்தரஜெயபால் என்ற மயில்வாகனன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர்கள் அறிமுகம் செய்து கொண்டனர்.
கூட்டத்தில் திட்டக்குழுவானது ஊரக வளர்ச்சித்திட்டம், வட்டார வளர்ச்சி திட்டம், மாவட்ட ஊராட்சி வளர்ச்சி திட்டம் தொடர்பாக பணியினை மேற்கொள்வது குறித்து திட்டம் தயாரிப்பது, எதிர்கால திட்டங்கள் குறித்தும் 3 மாதத்துக்கு ஒருமுறை கூடி விவாதம் நடத்தப்படும். மாவட்டத்தின் இயற்கை வளம் மற்றும் மனிதவளம் சம்பந்தமான அனைத்து விவரங்களையும் சேகரித்து தொகுத்து தகவல் தளம் அமைத்தல் பணியினை செய்வது.
பணிகள் குறித்து கண்காணிப்பு
ஊரக மற்றும் நகர்ப்பகுதி உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சார்புத்துறைகள் தயாரித்த பொருளாதார வளர்ச்சி நலத்திட்டங்களை அமல்படுத்திட வரைவு திட்டங்கள் தயாரித்தல், அவை பற்றி விவாதித்து ஒருங்கிணைந்த அடிப்படை வசதி வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழலை பேணி காக்க உதவுவது. மத்திய அரசு பொறுப்பு ஏற்கும் திட்டங்கள் உள்பட செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள், பணிகளின் செயலாக்கத்தையும் கண்காணித்து செய்வது போன்ற செயல்கள் மாவட்ட திட்டக்குழுவின் பணிகள் ஆகும் என எடுத்துக்கூறப்பட்டது.கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் முத்துச்செல்வம், ஒன்றியக்குழு தலைவர் வைஜெயந்திமாலா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் புள்ளியில் அலுவலர் வடிவழகன் நன்றி கூறினார்.