கோடை காலம் தொடங்க உள்ளதால் நீலகிரியில் மின் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்-அதிகாரிகள் தகவல்


கோடை காலம் தொடங்க உள்ளதால் நீலகிரியில் மின் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்-அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 21 Feb 2023 12:30 AM IST (Updated: 21 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கோடை தொடங்க உள்ளதால் நீலகிரியில் மின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீலகிரி

ஊட்டி

கோடை தொடங்க உள்ளதால் நீலகிரியில் மின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குந்தா அணை

தமிழகத்தின் தண்ணீர் தொட்டி என்று நீலகிரி மாவட்டம் அழைக்கப்படுகிறது. சமவெளியில் பாயும் நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதியாகவும் விளங்குகிறது. இங்கு உற்பத்தியாகும் மாயார், பவானி ஆகிய இரு ஆறுகளும் கோவை, ஈரோடு மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவையை பூர்த்தி செய்து, காவிரியுடன் கலந்து டெல்டா மாவட்டங்களை சென்றடைகின்றன.

இதேபோல் 60 சதவீதத்திற்கும் அதிகமாக வனப்பகுதி இருப்பதால் ஆண்டில் சுமார் 94 நாட்கள் மழை பெய்து வருகிறது. அதாவது மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகள் மூலம் ஆண்டிற்கு சுமார் 1250 மில்லி மீட்டர் மழை பொழிவு பெய்கிறது.

இதேபோல் மலை மாவட்டம் என்பதால் குந்தா, பைக்காரா புனல் நீர்மின் திட்டத்தின் கீழ் உள்ள 12 மின் நிலையங்கள் மூலமாக 833.65 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், நீலகிரி மாவட்டத்துக்கு 70 மெகாவாட் பயன்படுகிறது. மீதமுள்ள மின்சாரம், ஈரோடு கிரீட்டுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து தமிழகம் முழுவதும் வினியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது நீலகிரியில் நீர் மின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது.

80 சதவீதம்

நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை அனைத்து அணைகளும் ஒன்றோடு ஒன்று ஒன்றிணைந்துள்ளதால், மாவட்டத்தில் சேகரமாகும் நீர் விரயமாகாமல் மின் உற்பத்திக்கு பயன்படுகிறது. இதன் மூலம் குந்தா திட்டத்தின் கீழ் அவலாஞ்சி, பார்சன்ஸ் வேலி குந்தா, கெத்தை, பரளி, பில்லூர் மூலம் 585 மெகா வாட்டும், பைகாரா திட்டத்தின் கீழ் முக்குருத்தி, சிங்காரா, மரவகண்டி, மாயார் மூலம் 248 மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம். இதில் குந்தா அணையில் 60 மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம். தற்போது வரை 510 முதல் 550 மெகாவாட் உற்பத்தி நடந்து வருகிறது. தற்போது சமவெளி பகுதியில் கோடை வெயில் தாக்கம் தொடங்கி இருப்பதால் மின் தேவையும் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. மின் நிலையத்தில் உச்சமின் தேவையை அதிகரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு முன்னர் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு 400 முதல் 450 மெகாவாட் வரை மின் வினியோகம் செய்யப்பட்ட நிலையில், வருகிற நாட்களில், அதை தண்ணீரின் அளவைப் பொறுத்து 600 மெகாவாட்டாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story