23 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி


23 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி
x
தினத்தந்தி 25 Sept 2022 12:30 AM IST (Updated: 25 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 23 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி தொடங்கி வைத்தனர்.

திண்டுக்கல்

தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் 23.8 சதவீதமாக இருக்கும் காடுகளின் பரப்பை, 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த ஆண்டு பசுமை தமிழகம் இயக்கம் எனும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் காடுகள் மற்றும் பிற பகுதிகளில் 260 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட இருக்கிறது.

இதையொட்டி இந்த ஆண்டுக்கான மரக்கன்றுகள் நடும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 23 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட இருக்கின்றன. திண்டுக்கல், கொடைக்கானல் வனக்கோட்டங்கள், திண்டுக்கல் சமூக காடுகள் வனக்கோட்டம் மூலம் காடுகள், விவசாய நிலங்கள், தரிசு நிலங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது.

அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

இதன்தொடக்க நிகழ்ச்சி திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வன அலுவலர் பிரபு, மேயர் இளமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு, பணியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் உதவி வனப்பாதுகாவலர் இளங்கோ, சிறுமலை வனச்சரகர் மதிவாணன், முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் உள்ளிட்ட அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story