வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் 501 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் 501 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
ஆடுதுறை பேரூராட்சியில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் 501 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்- அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சியில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் 501 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. விழாவிற்கு அரசு தலைமை கொறடா கோவி.செழியன் தலைமை தாங்கினார்.
கும்பகோணம் ஆர்.டி.ஓ. லதா, திருவிடைமருதூர் தாசில்தார் சுசீலா, ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் மணிமாறன், பேரூராட்சி துணைத் தலைவர் கமலா, கவுன்சிலர் கோ. சி. இளங்கோவன், ஒன்றிய கவுன்சிலர் மருதையன், ஆடுதுறை வர்த்தக சங்க நிர்வாகி அழகு பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவில் வனப்பகுதி 33 சதவீதம் என்ற நிலையில் தமிழகத்தில் 23 சதவீதம் வனப்பகுதி உள்ளது.
முதல் பேரூராட்சியாக ஆடுதுறை
தஞ்சை மாவட்டத்தில் 0.3 சதவீதம் மட்டுமே வனப்பகுதியாக இருப்பதால் பசுமையை பாதுகாக்கவும், வனப்பகுதி பரப்பளவை அதிகப்படுத்தும் நோக்கில் தொண்டு அமைப்புகளின் உதவியோடு வீட்டுக்கு ஒரு விருட்சம் எனும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் முதல் பேரூராட்சியாக ஆடுதுறை பேரூராட்சியில் இத்திட்டம் தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆடுதுறை மருத்துவக்குடி திருநீலக்குடி சாலை பகுதி மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் பல்வேறு வகையான 501 மரக்கன்றுகள் நடப்பட்டு பாதுகாப்புக்கு கூண்டும் அமைக்கப்பட்டது.இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் சபீம் நிஷா, முத்து பீவி, பரமேஸ்வரி, சுகந்தி, பால தண்டாயுதம், மாலதி, மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.முன்னதாக பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் வரவேற்றார். முடிவில் செயல் அலுவலர் சிவலிங்கம் நன்றி கூறினார்.