600 மரக்கன்றுகள் நடும் பணி
திருப்பத்தூரில் மரக்கன்றுகள் நடும்பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
மரக்கன்று நடும் பணி
திருப்பத்தூர் மாவட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் திருப்பத்தூர்- தருமபுரி மெயின் ரோட்டில் சு.பள்ளிப்பட்டு ஊராட்சி மேம்பாலம் அருகே முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன், அ.நல்லதம்பி எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு கருணாநிதி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, 600 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தனர்.
பின்னர் கலெக்டர் பேசியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர்- திருவண்ணமலை சாலையிலும், சிங்காரப்பேட்டை சாலையிலும் தலா 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது. தொடர்ந்து ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதிக்குட்பட்ட சாலைகளில் 6 ஆயிரம் மரக்கன்றுகள், போளுார், ஜமுனாமுத்தூர், ஆலங்காயம், வாணியம்பாடி சாலையில் 400 மரக்கன்றுகள் நடப்பட்டது.
பராமரிப்பு
நெடுஞ்சாலைத்துறையின் முக்கிய சாலைகளான, திருப்பத்தூர், ஆலங்காயம், பர்கூர், ஆசனாம்பட்டு, நாட்டறம்பள்ளி சாலைகளில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் அரசமரம், புளிய மரம், புங்கன் மரம், வேப்பமரம், காட்டுமரம், பூவரச மரம், நீர்மருது மற்றும் பல்வேறு வகை பலன்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
நிகழ்ச்சிகளில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர் மணிசுந்தரம், உதவி பொறியாளர் சீனிவாசன், ஒன்றிக் குழு தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.