தூத்துக்குடியில் கடற்கரை பகுதியில் அலையாத்தி மரக்கன்று நடவு


தூத்துக்குடியில் கடற்கரை பகுதியில் அலையாத்தி மரக்கன்று நடவு
x
தினத்தந்தி 6 Jun 2023 12:15 AM IST (Updated: 6 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கடற்கரை பகுதியில் அலையாத்தி மரக்கன்று நடவுபணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அலையாத்தி மரக்கன்றுகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நட்டினார்.

அலையாத்தி காடுகள்

கடற்கரையின் அரணாக அலையாத்தி காடுகள் விளங்கி வருகிறது. இந்த அலையாத்தி காடுகளை பாதுகாத்து வளர்ப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அலையாத்திகாடுகள் ஆற்றின் முகத்துவாரத்தில் அதிகமாக காணப்படும். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் முகத்துவாரங்களாக பழையகாயல், புன்னக்காயல் பகுதியிலும், தூத்துக்குடி உப்பாற்று ஓடை முகத்துவாரத்திலும் அலையாத்திகாடுகள் காணப்படுகின்றன. இந்த காடுகளை வளர்ப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனால் கடற்கரை வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானங்களை ஏற்படுத்துவதற்காக சதுப்பு நில முன்முயற்சி என்ற திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் தமிழகத்தில் 5 மாவட்டங்கள் உள்பட நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் அலையாத்தி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

மரக்கன்று நடும் நிகழ்ச்சி

இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் ரோச் பூங்காவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட வனத்துறை சார்பில் 200 அலையாத்தி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு படகு குழாம் பகுதியில் அலையாத்தி மரக்கன்றுகளை நட்டினார்.

அதன்பிறகு ரோச் பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் "புல்வாய் தடங்கள் தென்கோடி வெளிமான் மந்தைகளைப் பின் தொடர்தல்" என்ற புத்தகத்தை வெளியிட்டும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு தமிழ்நாடு அரசின் பசுமை முதன்மையாளர் விருது மற்றும் காசோலையையும் அமைச்சர் கீதாஜீவன் வழங்கி பேசினார். அப்போது, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடும்நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அலையாத்தி காடுகளை வளர்ப்பதற்காக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பழையகாயல் பகுதியில் 50 ஏக்கர் பரப்பில் அலையாத்தி காடுகள் உள்ளன. அதே போன்று தூத்துக்குடி, முள்ளக்காடு பகுதியிலும் அலையாத்தி காடுகளை வளர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அலையாத்திகாடுகள் கடல் அரிப்பை தடுக்கக்கூடியது. மீன்கள் அந்த பகுதியில் முட்டையிட்டு வளம் பெருகும் வாய்ப்பு உள்ளது. இயற்கை பேரிடரின் போது அலையாத்தி காடுகள் தடுப்பு அரணாக இருக்கும். அலையாத்திகாடுகளை அதிக அளவில் வளர்க்க வேண்டும். இது நமக்கு பயன்தரக்கூடியதாக இருக்கும். தமிழக முதல்-அமைச்சர் தமிழகத்தில் 23 சதவீதமாக உள்ள பசுமை பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று கூறினார்.

கலெக்டர் செந்தில்ராஜ்

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பேசுகையில், நமது மாவட்டத்தில் உள்ள அலையாத்திகாடுகளை பரப்பை அதிகரிக்க வேண்டும். கடந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டோம். மாவட்டத்தில் பசுமை கமிட்டி அமைத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை விட தூத்துக்குடி மாவட்டத்தில் குறைந்த அளவில் மரங்கள் உள்ளன. தமிழகத்தில் 20 சதவீதம் மரங்கள் இருந்தாலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 5 சதவீதம் தான் உள்ளன. அதனை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒவ்வொரு துறைகளின் சார்பிலும் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் கவுரவ்குமார், மாநகராட்சி மண்டல தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story