டேன்டீ அலுவலகத்தை தோட்ட தொழிலாளர்கள் முற்றுகை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லியாளம் டேன்டீ அலுவலகத்தை தோட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பந்தலூர்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லியாளம் டேன்டீ அலுவலகத்தை தோட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர் போராட்டம்
பந்தலூர் அருகே நெல்லியாளம், சேரம்பாடி, கொளப்பள்ளி, சேரங்கோடு, சின்கோனா, பாண்டியார் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு அரசின் தேயிலை தோட்ட கழக (டேன்டீ) தோட்டங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.425.40 சம்பளம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை தினக்கூலி உயர்வு வழங்கப்பட வில்லை.
இதனால் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தொழிலாளர்களுக்காக தொடங்கப்பட்ட தேயிலை தோட்டங்களின் நிலங்களை வனத்துறைக்கு ஒப்படைப்பதை அரசு கைவிட வேண்டும். ஒப்படைத்த நிலங்களில் மீண்டும் பச்சை தேயிலை பறிக்க அரசு அனுமதி வழங்க வேண்டும். அரசு அறிவித்த ரூ.425.40 சம்பளம் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய விடுப்பூதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளர்கள் முற்றுகை
இந்தநிலையில் நேற்று நெல்லியாளம் அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் 1,2,3,4 ஆகிய பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கொளப்பள்ளி வழியாக ஊர்வலமாக சென்று நெல்லியாளம் டேன்டீ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் நிர்வாகிகள் பெரியசாமி, அருள்குமார், அமல்ராஜ், ரமேஷ், முத்துகுமார், ஏசுராஜ் மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, தேயிலை தோட்டங்களை வனத்துறையிடம் ஒப்படைத்தால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. இதை கைவிட வேண்டும். நிலுவையில் உள்ள பண பலன்களை வழங்க வேண்டும். பணியில் இருந்து நிறுத்தப்பட்ட தற்காலிக தொழிலாளர்கள் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற டேன்டீ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் அணிந்து அறவழி போராட்டம் நடத்தப்படும் என்றனர்.