தாலுகா அலுவலகத்தை தோட்ட தொழிலாளர்கள் முற்றுகை
நிலுவை சம்பளம் வழங்க கோரி கூடலூர் தாலுகா அலுவலகத்தை தோட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்,
நிலுவை சம்பளம் வழங்க கோரி கூடலூர் தாலுகா அலுவலகத்தை தோட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகையிட்டதால் பரபரப்பு
கூடலூர் சில்வர் கிளவுட் பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் மற்றும் தொழிற்சாலை உள்ளது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் நிலுவை சம்பளம் உள்ளிட்ட பண பலன்களை நிர்வாகம் வழங்காமல் உள்ளதாக கூறி கடந்த சில வாரங்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ., தாசில்தார் மற்றும் தோட்ட தொழிலாளர் நல அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சம்பளம் உள்ளிட்ட பண பலன்களை வழங்க தோட்ட நிர்வாகத்திடம் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து எழுத்துப்பூர்வமாக தோட்ட நிர்வாகத்திடம் கடிதம் பெற்றனர். இதனால் தொழிலாளர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். ஆனால், இதுவரை சம்பளம் உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. இதை கண்டித்தும், நிலுவை சம்பளம் வழங்க கோரியும் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் நேற்று கூடலூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பண பலன்கள்
போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச்செயலாளர் போஜராஜ் தலைமை தாங்கினார். தோட்ட தொழிலாளர்கள் சங்க செயலாளர் குணசேகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முகமது கனி, தோட்ட தொழிலாளர்களின் பிரதிநிதிகள் உசைன், முகமது, உன்னி, ரவிக்குமார், டேவிட் உள்பட ஏராளமான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன், தாசில்தார் சித்தராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பண பலன்களை உடனடியாக வழங்க தோட்ட நிர்வாக இயக்குனர்களை அழைத்து உத்தரவிடப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை ஏற்று தோட்ட தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டனர். இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறும்போது, 2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 23 வார சம்பளம் வழங்கவில்லை. 2019-2020-ம் ஆண்டு போனஸ் தொகை தர வில்லை. இன்னும் பண பலன்கள் தராமல் தொழிலாளர்களை தோட்ட நிர்வாகம் வஞ்சித்து வருகிறது. எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படா விட்டால் போராட்டம் தீவிரமடையும் என்றனர்.